×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: முகுல் வாஸ்னிக் தலைமையிலான காங்கிரஸ் மேலிட குழு வருகை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலையில் திமுகவுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதற்காக முகுல் வாஸ்னிக் தலைமையிலான காங்கிரஸ் மேலிட குழு சென்னை வந்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேர்தலை சந்திக்கும் வகையில் மாநிலங்களுக்கான பொறுப்பாளர்களை நியமிப்பது, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு, அறிக்கை தயாரிக்க குழு, ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்து தயாராகி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக பல்வேறு வியூகங்களை அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.

இந்நிலையில், திமுக, காங்கிரஸ் கட்சி இன்று பிற்பகலில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகிய மூவரும் இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தனர்.விமான நிலையத்தில் இருந்து நேராக அவர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அவர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். அதில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவிடம் எத்தனை தொகுதிகளை கேட்பது, எந்த தொகுதிகளை கேட்பது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசித்தனர். மேலும் தமிழக தலைவர்களிடம் கருத்துக்களையும் டெல்லியில் இருந்து வந்த தலைவர்கள் கேட்டனர். அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து காங்கிரஸ் குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலையில் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றனர். அப்போது டெல்லி தலைவர்களுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் உடன் சென்றனர். அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
கடந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் சுமூக உடன்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் தொகுதிகள் எண்ணிக்கை உறுதி செய்யப்படும். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைவர்கள் உறுதி செய்த பிறகு எந்தெந்த தொகுதிகளை பெறுவது என்பது பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது. திமுக வழங்கும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டால் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: முகுல் வாஸ்னிக் தலைமையிலான காங்கிரஸ் மேலிட குழு வருகை appeared first on Dinakaran.

Tags : DMK ,Congress ,Anna Vidyalaya, Chennai ,Congress High Commission ,Mukul Wasnik ,CHENNAI ,Chennai Anna Vidyalaya ,Dinakaran ,
× RELATED எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,...