×

சுற்றுலா பயணிகளுக்கு உதவ வழிகாட்டும் பலகை தேவை: பொதுமக்கள் கோரிக்கை

 

திருவாடானை, ஜன. 28: திருவாடானை அருகே சி.கே.மங்கலம் ரவுண்டானாவில் வழிகாட்டும் பலகை இல்லாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் சரியான திசையில் பயணிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில் தொண்டி – மதுரை – திருச்சி – ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடம் உள்ளது. அந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ரவுண்டானா கட்டப்பட்டது. அந்த ரவுண்டானாவின் நடுப்பகுதியில் வழிகாட்டும் பலகை நிறுவப்பட்டு பயணிகளுக்கு உதவிகரமாக இருந்து வந்தது.

சில மாதங்கு முன் அந்த வழிகாட்டும் பலகை சேதமடைந்து விழுந்து விட்டது. ஆனால் அதன்பிறகு அந்த பகுதியில் புதிய வழிகாட்டும் பலகை ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள், எந்த பக்கம் செல்ல வேண்டும் என தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சி.கே.மங்கலத்தை சேர்ந்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த ரவுண்டானா மிகவும் முக்கியமான பகுதிகளுக்கு செல்லும் பிரிவு இடமாக உள்ளது குறிப்பாக ராமேஸ்வரம் மற்றும் திருவொற்றியூர் பாகம்பரியாள் கோயில் போன்ற முக்கிய தலங்களுக்கு வெளியூரில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த ரவுண்டானாவில் உள்ள வழிகாட்டும் பலகையை பார்த்து மட்டுமே அவர்கள் செல்ல வேண்டிய சாலையை தெரிந்து கொண்டனர். ஆனால் அந்த பலகை உடைந்து போனதால், பகலில் வருவோர் அந்த பகுதியில் இருப்பவர்களிடம் சாலை குறித்து கேட்டுவிட்டு செல்கின்றனர். ஆனால், இரவு நேரங்களில் ராமேஸ்வரத்திற்கு வரும் வட மாநில பக்தர்கள், யாரிடமும் கேட்க வழியின்றி தவித்து வருகின்றனர். எனவே ரவுண்டானா பகுதியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழிகாட்டும் பலகை அமைக்க வேண்டும்’’ என்றனர்.

The post சுற்றுலா பயணிகளுக்கு உதவ வழிகாட்டும் பலகை தேவை: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Rameswaram ,CK Mangalam ,Thiruvadan ,Thondi ,Madurai ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்