×

விருத்தாசலம் பகுதியில் திடீர் மழை நெல் மூட்டைகள் நனைந்து சேதம் விவசாயிகள் சாலை மறியல்

 

விருத்தாசலம், ஜன. 28: கடலூர் மாவட்டத்தில் மிக முக்கிய மார்க்கெட் கமிட்டியாக விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. இங்கு கடலூர் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி முடிவடைந்த நிலையில் அதிக அளவில் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு கொண்டு வரும் நெல் மூட்டைகள் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் அடுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை திடீரென விருத்தாசலம் பகுதியில் பெய்த மழையால் மார்க்கெட் வளாகத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்துள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாமல் நெல் மூட்டைகளை மூடுவதற்கு நிர்வாகத்திடம் தார்ப்பாய் கேட்டுள்ளனர். அப்போது அனைத்து விவசாயிகளுக்கும் படிப்படியாக தார்பாய்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தங்களுக்கு தார்ப்பாய் விரைவில் வழங்கப்படவில்லை என கூறி திடீரென விருத்தாசலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தினர், அவர்களிடம் சமாதானம் பேசி அனைவருக்கும் தார்ப்பாய் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் அதற்குள் மழையும் நின்று விட்டதால் விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post விருத்தாசலம் பகுதியில் திடீர் மழை நெல் மூட்டைகள் நனைந்து சேதம் விவசாயிகள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Viruthachalam Regulation Sales Hall ,Cuddalore ,Villupuram ,Kallakurichi ,Ariyalur ,Salem ,Vriddhachalam ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...