×

தமிழ்நாடு 610/4 டிக்ளேர்

கோவை: சண்டிகர் அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 610 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் முச்சதம் விளாசி முத்திரை பதித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சண்டிகர் 111 ரன்னில் ஆல் அவுட்டானது (47 ஓவர்). அடுத்து களமிறங்கிய தமிழ்நாடு, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்திருந்தது. நாராயண் ஜெகதீசன் 108 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 87 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆடத்தை தொடங்கினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 233 ரன் சேர்த்தது.பிரதோஷ் 105 ரன் (151 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அவுட்டானார். அடுத்து ஜெகதீசன் – இந்திரஜித் இணைந்து 3வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 280 ரன் சேர்த்தனர். ஜெகதீசன் இரட்டை சதம் விளாச, இந்திரஜித் 123 ரன் எடுத்து (144 பந்து, 11 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த பூபதி குமார் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, முச்சதம் அடித்து அசத்திய ஜெகதீசன் 321 ரன் (403 பந்து, 23 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி விக்கெட்டை இழந்தார். தமிழ்நாடு 126.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 610 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, 499 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய சண்டிகர் 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 1 ரன் எடுத்துள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

The post தமிழ்நாடு 610/4 டிக்ளேர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Coimbatore ,Ranji Trophy Elite C division league ,Chandigarh ,Narayan Jagatheesan ,Dinakaran ,
× RELATED காளான் வளர்க்க பயிற்சி