×

நாடாளுமன்ற தேர்தல் உ.பியில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள்: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

லக்னோ: மக்களவை தேர்தலையொட்டி உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணியிலுள்ள காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. விரைவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சூடு பிடித்துள்ளது. நாட்டிலேயே 80 என்ற எண்ணிக்கையில் அதிக தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் கடந்த 19ம் தேதி இந்தியா கூட்டணியில் முதல் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிக்கு 7 தொகுதிகளை ஒதுக்கி அறிவிப்பு வௌியானது.

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாடி இடையே நேற்று 2வது கூட்டணி உடன்பாடு சுமூகமாக எட்டப்பட்டது. மீதம் உள்ள 73 தொகுதிகளில் 11 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தன் ட்விட்டர் பதிவில், “உத்தரபிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என கருதப்படும் 11 தொகுதிகளில் காங்கிரசுடன் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது இந்தியா கூட்டணியின் நல்ல தொடக்கம்.பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் நலன்களை கருத்தில் கொண்டு தேர்தல் வியூகம் வகுக்கப்படும். உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இது இந்திய வரலாற்றை மாற்றும்” என்று பதிவிட்டுள்ளார்.

* கட்சி தலைமை முடிவெடுக்கும்

இதுகுறித்து உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியதாவது, “11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்து முகுல் வாஸ்னிக் தலைமையிலான குழு முடிவெடுக்கும். பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. விரைவில் நல்ல முடிவு வௌியாகும்” என்று தெரிவித்தார்.

* சாதகமாக இருக்கும்: காங்கிரஸ் தகவல்

11 தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் ஏற்படும் ஒப்பந்தம் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிக்கு சாதகமாக இருக்கும். இறுதி முடிவு எட்டப்பட்டவுடன் அறிவிப்பு வௌியிடப்படும்” என்று கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தல் உ.பியில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள்: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,UP parliamentary ,Samajwadi ,Akhilesh Yadav ,Lucknow ,India ,Uttar Pradesh ,Lok Sabha elections ,Lok Sabha ,UP ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள்...