×

டெல்லி அரசை கவிழ்க்க 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி லஞ்சம்: பா.ஜ மீது முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மியின் அரசை கவிழ்க்க எங்களது ஏழு எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.25கோடி லஞ்சம் தருவதாக பாஜகவினர் பேரத்தில் ஈடுபட்டனர் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் தளத்தில் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில்,கூறியிருப்பதாவது; வரும் மக்களவை தேர்தலை அடிப்படையாக கொண்டு பாஜ கட்சியானது பல மோசமான செயல்களை செய்து வருகிறது. டெல்லியில் உள்ள எங்களது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஏழு எம்எல்ஏக்களை தொடர்பு கொண்ட பாஜவினர், ‘‘அடுத்த சில நாட்களுக்கு பிறகு கெஜ்ரிவாலை கைது செய்து விடுவோம். அதன் பிறகு ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் அனைவரையும் பல பிரிவாக உடைப்போம். குறிப்பாக பாஜவில் சேருவதற்காக 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மற்றவர்களிடமும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது. அதன் பின்னர் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்ப்போம். அதனால் நீங்கள் பாஜவில் இப்போதே இணைந்து விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யும் பட்சத்தில் வருபவர்களுக்கு தலா ரூ.25 கோடி லஞ்சமாக கொடுக்கப்படும். மேலும் தேர்தலின் போது போட்டியிட சீட்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பாக பாஜக தரப்பில் 21 எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் அணுகப்பட்டதாக கூறினாலும், நாங்கள் விசாரித்த தகவலின்படி, அவர்கள் இதுவரை ஏழு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை மட்டுமே தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர்களது கோரிக்கைகளை எம்எல்ஏக்கள் நிராகரித்து விட்டனர். தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிப்பது என்பது பாஜகவின் அதிகாரத்தினால் நிச்சயமாக முடியாது என்பதால் எங்களது அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக விரும்புகிறது. அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* ஆதாரம் எங்கே? பா.ஜ கேள்வி

கெஜ்ரிவால் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள டெல்லி பா.ஜ செயலாளர் ஹரிஷ் குரானா, ‘‘கெஜ்ரிவால் சொல்வதில் உண்மை இருந்தால் அவர்களது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எங்களை தொடர்பு கொண்டவர்களின் பெயரை வெளிப்படையாக கூற வேண்டும் என்று சவால் விடுகிறோம். ‘ என தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை பா.ஜ தலைவர் குரானா கூறுகையில்,’ கெஜ்ரிவால் ஆதாரத்தை வெளியிட வேண்டும். அல்லது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

The post டெல்லி அரசை கவிழ்க்க 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி லஞ்சம்: பா.ஜ மீது முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : 7 Aadmi ,Delhi government ,Chief Minister ,Kejriwal ,BJP ,New Delhi ,Arvind Kejriwal ,Aam Aadmi Party government ,Delhi ,7 Aadmi Party MLAs ,CM ,Dinakaran ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...