×
Saravana Stores

பெருங்குடியில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வெள்ளக்காடானது குடியிருப்புகள்: சாலையில் 10 அடி பள்ளம், டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்தது

சென்னை: பெருங்குடியில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், சாலையில் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. மேலும், சுற்றுச்சுவர் இடிந்து, டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததுடன் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி, பெருங்குடி 184 மற்றும் 186வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் 45 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பெருங்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில் உள்ளது.

இங்கிருந்துதான் அனைத்து பகுதிகளுக்கும் ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து செல்லும் பிரதான குழாயில் நேற்று முன்தினம் மாலை திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையை ஒட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்து மணல் அரிப்பு ஏற்பட்டதால் ராட்சத பள்ளம் உருவானது. குடியிருப்பில் தரைதளத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் பைக்குகள் பள்ளத்தில் சரிந்து விழுந்தன.

சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. இதேபோல் குடியிருப்பையொட்டி அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்து, சிறிது நேரத்தில் குடியிருப்பு மீது சாய்ந்து விழுந்தது. இதை பார்த்து பதறிப்போன குடியிருப்புவாசிகள் அங்கிருந்து அலறியடித்து வெளியேறினர். தகவலறிந்து பெருங்குடி மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று காலை 10 மணி வரை சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அச்சாலை கடுமையாக சேதமடைந்தது.

10 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. டிரான்ஸ்பார்மர் சரிந்து குடியிருப்பு மீது விழுந்ததால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. குழாய் உடைப்பால் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.
தகவலறிந்து பெருங்குடி குடிநீர் வாரிய உயரதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

பின்னர், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெருங்குடி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘‘டிரான்ஸ்பார்மர் குடியிருப்பு மீது விழுந்ததால் மின் தடை ஏற்பட்டதோடு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யவேண்டும். பள்ளத்தை சரி செய்து புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தரவேண்டும்” என்றனர்.

The post பெருங்குடியில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வெள்ளக்காடானது குடியிருப்புகள்: சாலையில் 10 அடி பள்ளம், டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்தது appeared first on Dinakaran.

Tags : Perungudi ,Valakadana ,Chennai ,Chennai Municipality ,Valakadana Apartments ,
× RELATED சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டியது!