×

அண்ணாமலையை மோடி கட்டுப்படுத்த வேண்டும் தமிழ்நாட்டில் பாஜவுக்கு அட்ரஸ் தந்தது ஜெயலலிதா: தேர்தலுக்கு பின் மக்கள் யார் பக்கம் என தெரியும் , கொந்தளித்த கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் பாஜவுக்கு அட்ரஸ் தந்தது ஜெயலலிதா. வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலையை மோடி கட்டுப்படுத்த வேண்டும். தேர்தலுக்கு பின் மக்கள் யார் பக்கம்’ என்று தெரிய வரும் என கே.பி.முனுசாமி ஆவேச பேட்டி அளித்து உள்ளார். கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தை அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ நேற்று திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள, அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கி விட்டோம். அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த பின், அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவிப்போம். அதிமுக தலைமை பற்றியும், கட்சி பற்றியும் பாஜ., தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். அவர்களை அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை ஆதரிக்கின்றனர். இதனால், அவர்கள் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் கோபத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களின் இந்த போக்கால் எங்களுக்கு நஷ்டமில்லை, லாபம் தான்.

தமிழ்நாட்டில் பாஜ 39 இடங்களில் வெற்றி பெறும் என அண்ணாமலை கூறியுள்ளார். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிந்த பின் தெரியவரும். அதன் பிறகு தான், அண்ணாமலை அதை உணர்வார். நடைபயணம் செல்லும் அவர், சென்னை கமலாலயத்தில் அமர்ந்து கொண்டு பேசுவது போல், செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். 1998 நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் பாஜவே கிடையாது. வடமாநிலத்தில் மட்டுமே இருந்த பாஜவை, ஜெயலலிதா தான் தென் மாநிலத்துக்கு அழைத்து வந்தார்.

அப்போதைய பாஜ தலைவர் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகிய இருவரையும், சென்னை மெரினாவுக்கு அழைத்து வந்து, தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை ஜெயலலிதா தலைமையேற்று நடத்தினார். ஆனால், தமிழருக்கான உரிமையை தர மறுத்ததால், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறினார். அந்த கட்டிடமும், அந்த அமைப்பும் நாங்கள் உருவாக்கி கொடுத்தது என்பதை அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலை தனது சொந்த கட்சியின் தலைவர்களை களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிரதமர் இதை அறிந்து, அவருடைய பேச்சை கட்டுப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ராமர் அனைவருக்கும் தெய்வம். அந்த தெய்வத்தை யாராவது ஏமாற்றினால், சும்மா இருக்காது. அதற்குரிய தண்டனையை அந்த ராமன் வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.

* தே.ஜ.கூட்டணி அமைத்தபோது அண்ணாமலை ஒரு மாணவர்
‘தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் வீடு என பேசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த போது, அவர் படிக்கின்ற மாணவராக இருந்திருப்பார். ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர், வரலாற்றை பிழையோடு கூறக்கூடாது’ என்று கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார்.

* வாஜ்பாய் பற்றி பேசாதது ஏன்?
கே.பி.முனுசாமி கூறுகையில், ‘அண்ணாமலை மீது நான் வன்மமாக இருக்கிறேன் என கூறுகிறார். ஆனால், அண்ணாமலை அரசியல் வரலாறு தெரியாமல், தன்னை முன்னிலைபடுத்தி, பாஜவை பின்னிலைப்படுத்தி பேசி வருகிறார். தலைசிறந்த தலைவர் நரேந்திர மோடி என கூறி, அவரது நற்பெயரை சம்பாதிக்க முயற்சி செய்கிறார். வாஜ்பாய் தலைமையில் பாஜ இருந்த போது, மோடி ஒரு தொண்டராகவோ அல்லது ஒரு மாநில தலைவராகவோ இருந்திருப்பார். வாஜ்பாயை வாழ்த்தி, தற்போது மோடி இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும். ஆனால், அண்ணாமலை வாஜ்பாய் பற்றி பேசுவது இல்லை. வாஜ்பாய் மறக்கடிக்கப்படுகிறாரா அல்லது மறந்து விடுகிறார்களா?.’

The post அண்ணாமலையை மோடி கட்டுப்படுத்த வேண்டும் தமிழ்நாட்டில் பாஜவுக்கு அட்ரஸ் தந்தது ஜெயலலிதா: தேர்தலுக்கு பின் மக்கள் யார் பக்கம் என தெரியும் , கொந்தளித்த கே.பி.முனுசாமி appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,Tamil Nadu ,KP Munusamy ,Krishnagiri ,Jayalalitha ,Annamalai ,KP Munuswamy ,Annamalai Jayalalitha ,KP ,Munusamy ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...