×

காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவிற்கு முரணாக காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் , காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில ஆளுநர் அவர்களின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத் தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : DTV DINAKARAN ,KARNATAKA GOVERNMENT ,KAVIRI ,Chennai ,Government of Karnataka ,Supreme Court ,Caviri Management Commission ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...