×

தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஸ்பெயின் பயணம்: ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கும் சென்று ெதாழில் அதிபர்களுடன் பேச்சு

சென்னை: தொழில் முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்று தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சியடைவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு லட்சிய இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன்படி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாநிலத்தின் முதலீட்டு சூழலை மேம்படுத்தவும், வலுவான தொழில் சூழலை உருவாக்கவும், மனித வளத்தை பெருக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த மாநாடு மூலம் முன் எப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. அதனால் 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மொத்தம் 26,90,657 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இம்முதலீடுகள் பல்வேறு துறைகளில் இருந்து வரப்பெற்றுள்ளன. இந்நிலையில், தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை கொண்டு வர முதலீட்டாளர்களை சந்திப்பதற்கு இன்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று இரவு 9.40 மணிக்கு புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாய்க்கு செல்கிறார்.

அங்கிருந்து ஸ்வீடன் வழியாக ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலை பற்றி எடுத்துரைக்கிறார். இந்த பயணம் மூலமாக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்திட்டத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்கிறார். பின்னர், பிப்ரவரி 2வது வாரத்தில் கிட்டத்தட்ட 10 நாட்கள் பயணம் முடித்து சென்னை வந்தடைவார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த பயணத்தின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் முதல்வரின் செயலாளர் முருகானந்தம், தொழில்துறை செயலாளர் அருண்ராய், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடன் செல்கின்றனர். ஏற்கனவே, கடந்தாண்டு தொழில் முனைவோர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனால், முதல்வர் 3 நாடுகளுக்கு சென்று தொழில் துறையினரை சந்திக்க இருப்பது தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

The post தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஸ்பெயின் பயணம்: ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கும் சென்று ெதாழில் அதிபர்களுடன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Spain ,Australia ,United States ,Tadzhil ,Chennai ,MLA ,Tamil Nadu ,US ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு