×

அமெத்தய்ஸ்ட் என்ற செந்நீல மணி

குடிநோய் தீரும் ஆன்மிக சக்தி பெருகும்

அமெத்தய்ஸ்ட் என்ற ரத்தினம் சிவப்பும் நீலமும் கலந்து வயலட் அல்லது பர்ப்பிள் நிறத்தில் இருக்கும். இந்தக் கல் பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு உரியது. சனி கிரகத்துக்கு உரிய கல் என்பதால் மகரம், கும்பம் ராசியினர் அணிவது சிறப்பாகும். மேஷம், கடகம், சிம்மம், தனுசு ராசியினருக்கு சனியினால் ஏற்படும் தொல்லை நீங்குவதற்கு இந்த ரத்தினத்தை அணியலாம்.

அமெத்தய்ஸ்ட்டின் இயல்பு

ஆறு பட்டை வடிவம் கொண்ட இந்த உப ரத்தினம் இரும்பு தாதுவில் உள்ள மாசினால் நிறம் மாறி வரும். இக் கல்லின் நிறங்கள் லைட் வயலட் கலரில் இருந்து டார்க் பர்பிள் வரை மாறும். இரும்பு தாதுவின் அழுக்கு குறைவாக இருந்தால் கல்லின் நிறம் வெளியே செந்நீலமாக இருக்கும். அமெத்தய்ஸ்ட் வெளிச்சத்திலும் வெப்பத்திலும் வெளிறி வெளுத்துப் போகும் வெளிநாடுகளில் அமெத்தய்ஸ்ட்

இந்த ரத்தினம் பல நாடுகளில் கிடைக்கின்றது. சைபீரியா, பிரேசில், உருகுவே மற்றும் தூர கிழக்க நாடுகளில் ஏராளமாகக் கிடைக்கின்றது. பன்னெடுங்காலமாக விஷ முறிவுக்காக வெளிநாடுகளில் இந்த ரத்தினத்தை அணிந்து வருகின்றனர். ஐரோப்பாவில் படைவீரர்கள் வலி நிவாரணத்துக்கும் மனக் கவலை குறையவும் தாங்கள் அணியும் தாயத்துகளில் இதனைப் பதித்து அணிந்தனர். இங்கிலாந்தில் புதை குழிகளில் இச்செந்நீலக்கற்கள் காணப்பட்டன.

ஆன்மிகவாதிகளின் ரத்தினம்

ஆன்மிகத்தோடு தொடர்புடைய ரத்தினம் என்பதால் கிறிஸ்துவப் பேராயர்கள் தங்களின் மோதிரத்தில் அமெத்தய்ஸ்ட் பதித்து அணிவார்கள். அவர்கள் இடுப்பில் கட்டி இருக்கும் இடுப்புப் பட்டை பர்ப்பிள் நிறத்தில் தான் இருக்கும். எகிப்தியர்கள் பல நூற்றாண்டுகளாக விஷத்தை முறிக்கும் என்ற நம்பிக்கையில் அணிந்து வருகின்றனர். கிரீஸ் நாட்டிலும் இன்னம்பிக்கை உண்டு. சீனாவில் ஃபென் சூயியில் செல்வம் பெருகுவதற்கு அமெத்தய்ஸ்ட் அணியும்படி கூறுவர். அங்கு தீய சக்திகளை விரட்டவும் அன்றாடப் பாடுகளைக் குறைக்கவும் அமெத்தய்ஸ்ட் அணிகின்றனர்.

விலை என்ன?

ஒரு காலத்தில் இதன் மதிப்பு வைரம், பவளம், நீலம், மரகதம் போன்ற மகா ரத்தினங்களுக்கு இணையாக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்நிலை நீடித்தது. அதன் பிறகு பிரேசில் நாட்டில் அதிகமாக இக் கல் வெட்டி எடுக்கப்பட்டதனால் இதன் சந்தை மதிப்பு குறைந்தது. தற்போது 20 டாலர் முதல் 50 டாலர் வரை ஒரு கேரட் அமெத்தய்ஸ்ட் கிடைக்கிறது.

நல்ல பலன்கள்

அமெத்தய்ஸ்ட் அணிவதால் மகிழ்ச்சி, செல்வம், மரியாதை கிடைக்கும். வலி நிவாரணியாக செயல்படும். மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆன்மிக உணர்வை அதிகரிக்கும். கவனத்தை சிதற விடாமல் ஒருமுகப்படுத்தும். உடம்பின் மேல் தோல் மினுமினுக்கும் பின்னர் நடப்பதை முன்பே தெரிந்து கொள்ளக்கூடிய நுண்ணுணர்வு கிடைக்கும்.

தீய பலன்கள்

அமெத்தய்ஸ்ட் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு வாந்தி வயிற்று வலி போன்றவை உண்டாகும். உடம்பில் நீர்ச்சத்து அதிகரித்து கை கால்களில் வீக்கம் தோன்றும். சிலர் எடை கூடி வாத நோயினால் அவதிப்படுவர்.

ஆன்மிகத்துக்கு அமெதய்ஸ்ட்

அமெத்தய்ஸ்ட் மூன்றாம் கண் எனப்படும் ஞானக் கண்ணைத் திறக்கும் ஆற்றல் படைத்தது. சகஸ்ராரம் என்ற சக்கரத்தைக் குறிக்கும். எனவே இதனை அணிவதனால் தெய்வ சக்தி கிடைக்கும். இதனை அணிவதால் சகஸ்ராரம் செயல்படத் தொடங்கும். சக்ஸ்ராரத்தில் சிவசக்தியின் ஆனந்தம் தாண்டவம் நடக்கும். இவ் இடத்துக்கு ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரையை அடையாளச் சின்னமாகக் குறிப்பிடுகின்றனர். சித்தர்கள், சாமியார்கள், ஜோதிடர், மந்திரவாதி போன்றவரும் அமெத்தய்ஸ்ட் அணிவதால் ஆன்மிக சக்தி பெருகும்.

எப்படி அணிய வேண்டும்? அமெத்தய்ஸ்டை வெள்ளி அல்லது பிளாட்டினத்தில் பதித்து மோதிரம், செயின் டாலர், காதணி, வளையல், கைக் காப்பு, தாயத்து என்று செய்து அணியலாம். இக்கல் சனி ராசிக்கும் சனி கிரகத்துக்குரிய கல் என்பதனால் வெள்ளி அல்லது பிளாட்டினத்தில் அணிய வேண்டும். தங்கத்தில் அணிவதைத் தவிர்க்கலாம். தங்கத்தில் அணிவதாக இருந்தாலும் திறந்த வேலைப்பாட்டுடன் பதித்து இக்கல் உடம்பில் படும்படி அணிய வேண்டும்.

தூய்மைப்படுத்துதல்

ரத்தினத்தை அணிவதற்கு முன்பு தோஷ நிவர்த்தி சடங்கு செய்ய வேண்டும். பாலில் கழுவி எடுத்து அணிவது பொதுவான முறை. சூரிய ஒளி அல்லது சந்திர ஒளியில் சிறிது நேரம் வைத்துப் பிறகு அணியலாம். அல்லது உப்புத் தண்ணீரில் கழுவியும் அணியலாம். கிரகண காலத்தில் உணவில் உள்ள உணவில் படியக்கூடிய விஷத்தை போக்குவதற்காக உணவுப் பொருட்களில் தர்ப்பைப்புல் போட்டு வைப்பது வழக்கம். அதே தர்ப்பை புல்லின் மீது இந்நகையை வைத்திருந்து சனி ஓரையில் எடுத்தும் அணியலாம். தன்னுடைய குருநாதர் அல்லது சாதுக்கள் சித்தர்கள் இவர்களிடம் கொடுத்து தூய்மை செய்து தரும்படி வேண்டி வாங்கி அணியலாம்.

எப்போது அணிய வேண்டும்?

அமெத்தய்ஸ்ட் அணியும் நேரத்தில் மனதில் கவலையோ கோபதாபமோ இருக்கக் கூடாது. மனம் அமைதியான நிலையில் இருக்க வேண்டும் அவமானம் படபடப்பு போன்ற நேரங்களில் அமித்தய்ஸ்ட்டை அணியக்கூடாது. அதிகாலைப் பொழுது அல்லது மாலை பொழுதில் தியானம் செய்து மனம் அமைதி அடைந்த பின்பு குருபூஜை செய்து குலதெய்வத்தை வேண்டி பின்பு முதன் முறையாக அமெத்தய்ஸ்ட் பதித்திருக்கும் நகையை அணிய வேண்டும். படுக்கை அறைக்குள் இந்த ரத்தினத்தைக் கொண்டு போகலாமா? தூங்கும்போது இந்நகை அணிந்து இருக்கலாமா என்று சிலருக்கு ஐயம் தோன்றுவதுண்டு.

அவ்வாறு இரவும் பகலும் எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் அதைக் கழற்றி அடுத்த அறையில் வைத்து விட்டு தூங்கச் செல்ல வேண்டும். ஒரு வாரம் கழித்து படுக்கையறைக்குள் படுக்கையை விட்டு சற்று தள்ளி ஓரிடத்தில் வைக்க வேண்டும். இன்னொரு வாரம் கழித்து நகையை படுக்கையின் பக்கத்து மேசையில் வைக்கலாம். அதன் பிறகு தலையணைக்கு கீழே வைக்கலாம்.

இவ்வாறு படிப்படியாக சனியின் சக்தியை அமித்தயஸ்ட் நகையின் மூலமாகப் பெற்று படுக்கை வரை கொண்டு வரலாம். பின்பு விரலில் போட்டுக் கொண்டே தூங்கலாம் அல்லது கழுத்தில் அணிந்தபடியே உறங்கலாம். ரத்தினங்களை குறிப்பாக உப ரத்தினங்களை இரவில் கழற்றி வைத்துவிட்டு குறிப்பிட்ட நாளில் மட்டும் அணிந்து கொள்வதோ அல்லது குறிப்பிட்ட பிரச்சினைகள் வந்த சமயத்தில் அணிந்து கொள்வதோ சாலச் சிறந்தது.

பலன் எப்போது தெரியும்?

இந்நகை அணிந்து மூன்று வாரம் அல்லது 5 வாரம் அல்லது ஏழு வாரத்தில் பலன் தெரிந்து விடும். முதலில் மனக்கவலை நீங்கி மனதில் அமைதி உண்டாகும்பின்பு உற்சாகமாக செயல்கள் செய்வதற்கு உதவும் அதன் பிறகு சுறுசுறுப்பும் செல்வாக்கும் செல்வமும் நல்ல ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

யார் அணியலாம்?

அமெதய்ஸ்ட் ரத்தினத்தை தொழிலதிபர், நோயாளி, மன நலம் பாதித்தோர், மாமவர், போட்டி தேர்வுக்கு தயார் செய்வோர், அழகு போட்டிகளுக்கு தயார் செய்வோர் ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, கர்மச் சனி நடப்போர், சனி திசை சனி புத்திக்காரர் அணியலாம்.

தொகுப்பு: பிரபா எஸ்.ராஜேஷ்

The post அமெத்தய்ஸ்ட் என்ற செந்நீல மணி appeared first on Dinakaran.

Tags : Saturn ,Capricorn ,Aquarius ,
× RELATED கும்பம்