×

ஏன் எதற்கு எப்படி…?: வாஸ்து சாஸ்திரம் கோயில்களுக்கும் பொருந்துமா?

– திருக்கோவிலூர் H.B.ஹரிபிரசாத் சர்மா

?வீட்டு வரவேற்பறைக்கு பச்சைநிற வண்ணம்தான் பூச வேண்டும் என்கிறார்களே?
– சொஸ்திகா, கொச்சின்.

பச்சை நிற வண்ணம் மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. பச்சைநிறம் என்பது புதன் கிரகத்திற்கு உரியது. சூழலுக்கு ஏற்ப செயல்படும் திறனை புதன் கிரகம் நமக்குத் தரும். நம் வீட்டிற்குள் வரும் நபர் எந்த மனநிலையில் இருந்தாலும் அதனை செம்மைப்படுத்தும் தன்மை பச்சை நிறத்திற்கு உண்டு. அதனால்தான் வரவேற்பறைக்குப் பச்சை நிறத்தைப் பரிந்துரைக்கிறார்கள். இந்தக் கருத்து ஏற்புடையதே.

?சகோதரர்கள் ஒன்றாக வீடு கட்டலாமா?
– சங்கரராமன், திருக்கோவிலூர்.

சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே வீட்டினைக் கட்டி அதில் கூட்டுக் குடும்பமாக வாழ்வது சாலச்சிறந்தது. இந்தக் காலத்தில் அதெல்லாம் சரியாக வராது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நீங்கள் கூட சகோதரர்கள் ஒரே நேரத்தில் தனித்தனியே வீடு கட்டலாமா என்றுதான் கேட்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். தாராளமாக ஒரே நேரத்தில் வீடு கட்டலாம். ஆனால் கிரகபிரவேசத்தை தனித்தனியேதான் செய்ய வேண்டும்.

மூத்தவர் முதலிலும் இளையவர்கள் அடுத்தடுத்தும் வரிசையாக வெவ்வேறு நாட்களில் கிரகபிரவேசத்தைச் செய்ய வேண்டும். இந்த விதியானது ஒரே தெருவில் வீடு கட்டும்போது மட்டுமே பொருந்தும். வெவ்வேறு பகுதிகளில் வீடு கட்டுவார்களேயாயின் மூத்தவர் முதலில் புதுமனைப் புகுவிழா செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் சௌகரியப்படி செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஒருவர் வீட்டு கிரகபிரவேசத்திற்கு மற்றவர்கள் அனைவரும் செல்ல வேண்டும். யாரும் யாரையும் விட்டுக்கொடுக்கக் கூடாது. வீடுகள் தனித்தனியே இருந்தாலும் மனத்தளவில் கூடி வாழ்ந்தால்தான் கோடி நன்மை என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

?வீட்டின் வரவேற்பறையில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்?
– வி.எஸ்.சேஷாத்ரி, மணப்பாறை.

அமரும் நாற்காலிகள், ஒரு சிறிய டீப்பாய் போன்ற மேசை, ஓரத்தில் மரத்தாலான விநாயகர், ராதாகிருஷ்ணன் போன்ற சிலைகள், ஹேப்பிமேன் பொம்மைகள், ஒரு கிண்ணத்தில் நீர் ஊற்றி அதற்குள் அன்று மலர்ந்த வாசனை மலர்கள், சுவரில் இயற்கைக் காட்சிகள் அடங்கிய வால்பேப்பர்கள் ஆகியவற்றை வைக்கலாம்.

?வாஸ்து சாஸ்திரம் கோயில்களுக்கும் பொருந்துமா?
-சாருமதி,கோவை

கோயில்களில் இருந்து பிறந்தது தானே வாஸ்து சாஸ்திரம் என்பதே. சிற்பக் கலையின் ஒரு பாகம்தான் வாஸ்து சாஸ்திரம் என்பது. ஒரு ஆலயத்தை எழுப்பும்போது கருவறை இந்த இடத்தில் அமைய வேண்டும், அதன் நீள அகல அளவுகள் இவ்வாறு இருக்க வேண்டும், மூலஸ்தானம் தவிர்த்து இதர தெய்வங்களின் சந்நதிகள், அபிஷேக அலங்கார உற்சவ மண்டபங்கள், தீர்த்தக்குளம், தெப்பக்குளம் போன்றவை எங்கு அமைய வேண்டும், எந்த அளவில் அமைய வேண்டும் என்று தீர்மானிப்பதே வாஸ்து சாஸ்திரம்.

அவ்வாறு கோயில்களை அமைக்கும்போது பின்பற்றப்பட்ட விதிமுறைகளின் வழியே தான் முதன் முதலில் வாஸ்து சாஸ்திரம் என்பது சாமானிய மக்களுக்கும் புரியத் தொடங்கியது. ஆனால் கோயில்களுக்கான வாஸ்து சாஸ்திரம் என்பது வேறு, குடியிருப்புப் பகுதிகளுக்கான வாஸ்து சாஸ்திரம் என்பது வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

?எங்கள் வீடு மிகச் சிறியது. தனித்தனியே குளியல் அறை, கழிப்பறை போன்றவை இல்லை. அதனால் ஏதேனும் தோஷமோ அல்லது வாஸ்து பிரச்னையோ ஏற்படுமா?
– மீனா ராம்குமார், திருவானைக்காவல்.

வீட்டிற்குள்ளேயே குளியல் மற்றும் கழிப்பறைகளை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அவற்றை படுக்கை அறையோடு இணைக்காமல் தனியாக அமைப்பது நல்லது. இது போக இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்காமல் தனித்தனியேதான் அமைக்க வேண்டும். இடப்பற்றாக்குறையின் காரணமாக வேறு வழியின்றி அட்டாச்டு குளியல்&கழிப்பறைகளை அமைப்பவர்கள் குறைந்த பட்சமாக இவை இரண்டுக்கும் இடையே ஒரு தடுப்பு வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் குளியலறைப் பகுதிக்கும் கழிப்பறைப் பகுதிக்கும் ஒன்றரை அடி உயர வித்தியாசம் இருப்பதும் ஓரளவிற்கு நன்மையைத் தரும். வடகிழக்கு அல்லது தென்கிழக்கு மூலைகளில் குளியல் மற்றும் கழிப்பறைகள் இருக்கக் கூடாது. அப்படி அமைந்தால் அந்த வீட்டில் ஆரோக்ய குறைபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு.

?வீட்டில் அதிக அளவில் பல்லிகள் தொந்தரவு இருக்கிறது. தோஷம் ஏதேனும் இருக்கிறதா? இது நல்லதா?
– கு.ராதிகா, குளித்தலை.

வீட்டில் ஒன்றிரண்டு பல்லிகள் இருப்பது பிரச்னையில்லை. ஆனால் அதிக அளவில் பல்லிகள் தொந்தரவு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது நல்லதல்ல. அளவுக்கு அதிகமானால் எதுவும் நல்லதில்லையே. வீட்டில் அவ்வப்போது ஒட்டடை அடித்து சுத்தம் செய்து வாருங்கள். இயன்றால் புதிதாக சுண்ணாம்பு அல்லது பெயிண்ட் அடிப்பதும் நல்லது. நேர்மறையான எண்ணங்களைத் தரும் கந்த சஷ்டி கவசம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் போன்றவற்றை காலை மாலை இருவேளையும் வீட்டில் ஒலிக்கச்செய்யுங்கள். தினசரி பூஜை செய்யும்போது எழும் மணியோசையும் பல்லிகளின் தொல்லையை கட்டுப்படுத்தும்.

?இரு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படாதவாறு சென்றுவர என்ன செய்ய வேண்டும்? எந்த கடவுளின் படத்தை மாட்டி வைக்க வேண்டும்?
– அபராஜிதா, தாராபுரம்.

சாலை வழிப் போக்குவரத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தும் கிரகம் செவ்வாய். அந்த செவ்வாயின் அம்சம் ஆகிய முருகப்பெருமானை வணங்குதல் வேண்டும். பயணத்தின்போது கந்த சஷ்டி கவசத்தினை உச்சரிப்பதும் நல்லது. விநாயகர், வேல்முருகன், அனுமான், வாராகி அம்மன் போன்ற தெய்வங்களின் படங்களை மாட்டி வைப்பதும் விபத்தினைத் தடுக்கும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி…?: வாஸ்து சாஸ்திரம் கோயில்களுக்கும் பொருந்துமா? appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,HB Hariprasad Sharma ,Sostika ,Cochin ,Mercury ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!