×

விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது

*கிராமசபை கூட்டங்களில் வலியுறுத்தல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்தை பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எந்த நிலையிலும் அனுமதிக்க கூடாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பஞ்சாயத்துகளிலும் கிராம சபை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் தலைமை வகித்தனர். யூனியன் சிறப்பு அலுவலர்கள் மற்றும் வேளாண்மைதுறை, வருவாய்துறை, சமுகநலன் உள்ளிட்ட பிறத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசு திட்டங்கள் குறித்து கிராம மக்களுக்கு விளக்கினர்.

கூட்டத்தில் முன்னதாக அந்தந்த ஊராட்சி செயலர்கள் கடந்த நிதியாண்டிற்கான வரவு – செலவு கணக்குகளை வாசித்தனர்/ பொதுமக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து கணக்குகள் தனிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து கிராமங்களுக்கு தேவைப்படும் குடிநீர், சாலை, மின்சாரம், கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் மற்றும் இலவச வீடு, அரசின் உதவி தொகை திட்டங்கள் உள்ளிட்ட அரசு வழங்கக் கூடிய தனிநபர் திட்டங்கள், பொதுமக்களின் தேவைகள் குறித்து கிராமசபா கூட்டத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. வேதாளை கிராமசபை கூட்டத்தில் மண்டபத்துடன் தங்கள் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பாரனூரில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ராஜசேகர், திருவாடானை ஊராட்சியில் தலைவர் இலக்கியாராமு, பெரியகீரமங்கலம் ஊராட்சியில் சரளாதேவி ரெத்தினமூர்த்தி, டி.நாகனி ஊராட்சியில் தலைவர் இந்திரா ராஜேந்திரன், கல்லூரில் தலைவர் கஸ்தூரி சுப்பிரமணியன், பாண்டுகுடியில் தலைவர் சிங்கத்துரை, சிறுகம்பையூரில் தலைவர் குமார், கருமொழியில் தலைவர் முத்துராமலிங்கம், ஓரிக்கோட்டையில் காந்திமதி மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக் கூடாது. மேலும் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும் என பெரும்பாலான பஞ்சாயத்துகளில் பொது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Gram ,Sabha ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’