×

5வது குடியரசு தினவிழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு கவர்னர் மூவர்ண கொடியை ஏற்றினார்: வீர தீர செயலுக்காக 3 பேருக்கு விருது 22 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

சென்னை: நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர். என். ரவி தேசிய கொடியை ஏற்றினார். இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, காலை 7.54 மணிக்கு காவல்துறை வாகன அணிவகுப்புடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி நிகழ்ச்சி இடத்திற்கு வந்தடைந்தார். அவரை தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இதனையடுத்து, ராணுவத்தினரின் வாகன அணிவகுப்புடன் நிகழ்விடத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து, ஆளுநருக்கு முப்படை தலைமை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் ஆகியோரை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனையடுத்து காலை 8 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். அப்போது ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. இதன் பின்னர், ராணுவப்படை, கடற்படைப்பிரிவு, ராணுவ கூட்டு குழல் முரசிசை, வான் படை பிரிவு, கடலோர காவல் படை பிரிவு, கடற்படை ஊர்தி, வான் படை ஊர்தி உள்ளிட்ட 41 வகையான படை பிரிவுகள் அணிவகுத்து வந்தன. இந்த மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த யாசர் அராபத், நெல்லையை சேர்ந்த டேனியல் செல்வ சிங், தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் வட்டாச்சியர் சிவகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதேபோல், வேளாண்மை துறை சிறப்பு விருது நாராயண சாமி நாயுடுவிற்கும், நெல் உற்பத்தி திறனுக்கான விருதும் ரூ.5 லட்சத்திற்கான காசோலை சேலம் பூலாம்பட்டியை சேர்ந்த பாலமுருகனுக்கும், மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருதும், ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பதக்கத்தை கிருஷ்ணகிரி மாவட்ட தளி பகுதியை சேர்ந்த முகமது ஜூபேருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனையடுத்து, காந்தியடிகள் காவலர் பதக்கம் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.சசாங்சாய்-க்கும், சென்னை மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் காசி விஸ்வநாதனுக்கும், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் முனியசாமிக்கும் , மத்திய நுண்ணறிவுப் பிரிவு மதுரை மண்டல உதவி ஆய்வாளர் பாண்டியனுக்கும், மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் ரங்க நாதன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த காவல் நிலையத்திற்கான முதல்வர் விருது முதல் பரிசு மதுரை மாவட்டம் சி-3 எஸ் காவல் ஆய்வாளர் பூமிநாதனும், இரண்டாம் பரிசு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் மற்றும் மூன்றாம் பரிசு பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் வாசிவம் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, ஆறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ – மாணவியர் கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் பின்னர், அலங்கார ஊர்தி அணி வகுப்பு தொடங்கியது. தமிழரின் வீரத்தை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை பிரதிபலிக்கும் வாகன ஊர்தி இடம் பெற்றது. இதன் பின்னர், முதன் முதலாக அலங்கார ஊர்தி அணிவகுப்பில் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க வாகன அணிவகுப்பு தொடங்கியது. தமிழரின் வீரத்தை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை பிரதிபலிக்கும் வாகன ஊர்தி இடம் பெற்றது. அதேபோல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தத்ரூபமாக காட்சி அலங்காரம் ஊர்தியில் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா அணி வகுப்பு தளவாய் விங் கமாண்டர் விகாஷ்ஷாவை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து நாட்டுப்பண் இசைக்கப்பட்டு ஆளுநர் மற்றும் முதல்வர் காலை 9.25 மணியளவில் விடைபெற்றுக்கொண்டனர். 5 அடுக்கு பாதுகாப்பு: குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலை முதல் வாலாஜா சாலை வரை 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

* ஆயி அம்மாளுக்கு விருது

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள யா.கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆயி அம்மாள் எனப்படும் பூரணம் அம்மாள். கனரா வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்த இவருடைய கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். 2 வருடத்திற்கு முன் இவரது மகளும் உயிரிழந்தார். தற்போது, தனியாக வாழ்ந்து வரும் ஆயி அம்மாள் அரசுப் பள்ளியை தரம் உயர்த்த ரூ.7 கோடி மதிப்புள்ள தனது சொந்த நிலத்தை அரசுக்கு வழங்கினார். இவரின் இந்த மனதிற்காக, முதல்வரின் சிறப்பு விருது இவருக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

The post 5வது குடியரசு தினவிழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு கவர்னர் மூவர்ண கொடியை ஏற்றினார்: வீர தீர செயலுக்காக 3 பேருக்கு விருது 22 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : 5th Republic Day ,Tamil Nadu ,Governor ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,75th Republic Day ,R. N. Ravi ,India ,Chennai Marina Beach ,Tricolor ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...