×

விஷயம் வெளியானதால் ஜூரத்தில் இருக்கும் கிளுகிளு அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பெண் காக்கி விவகாரம் வெளியில் கசிந்ததால் ஜுரத்தில் இருக்காராமே கிளுகிளு அதிகாரி’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காக்கி அதிகாரி ஒருவர், சக பெண் காவலர்களிடம் அப்படியும் இப்படியும் நடந்து கொண்ட புகார்களில் சிக்கி பல மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டவராம். தற்போது அந்த காக்கி அதிகாரி, தனக்கு கீழ் உள்ள பெண் காவலர் ஒருவரிடமும் அப்படியும் இப்படியும் நடக்க முயற்சித்தாராம். இதனால் மனஉளைச்சலான அந்த பெண் காக்கி, அதிகாரியிடம் இருந்து தப்பிக்க சில தினங்களுக்கு முன் மெடிக்கல் லீவில் சென்று விட்டாராம். இந்த சம்பவம் தெரிந்தும் சக காக்கி அதிகாரிகள் அவர்களுக்கு மேல் உள்ள உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மவுனம் காத்து வருகிறார்களாம். நல்லா இருந்த அந்த பெண் காக்கி எதற்காக மெடிக்கல் லீவில் சென்றார் என்ற  விவகாரம் சக பெண் காக்கிகள் மத்தியில் கசிய தொடங்கியுள்ளது. தற்போது இந்த விவகாரம் மாவட்டம் முழுவதும் காக்கிகள் மத்தியில் அரசல் புரசலாக ஓடுகிறது. விஷயம் உயரதிகாரி கவனத்துக்கு சென்று விடுமோ என்ற பயத்தில் கிளுகிளு காக்கி அதிகாரி ஜுரத்தில் உள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘இலை ஆதரவு காக்கிகளின் தொல்லை தாங்க முடியவில்லை என புகார் வருகிறதே..’’என்றார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு  மாவட்டத்தில் கடந்த இலை கட்சி ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் கடைகளில்,  டெண்டர் எடுக்காமலேயே நூற்றுகணக்கான பார்கள் செயல்பட்டு வந்தன. 10  வருடங்களாக இதே நிலைமை நீடித்து வந்தது. அன்றைக்கு மதுவிலக்கில் அமைச்சராயிருந்த இலை கட்சியின் ஊர் பெயரைக் கொண்டவரின் கண் அசைவிலேயே மாவட்டத்தின் காக்கிகளில் சிலர் செயல்பட்டு வந்தனர். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, முறையாக டெண்டர் எடுத்து நடத்தப்படுகிறது. இப்போது, அன்றைக்கு வருவாய் பார்த்து வந்த அந்த சில காக்கிகள் மாமூலை கொடு என்பது துவங்கி  பல்வேறு நிலைகளிலும் வருவாய் கேட்டு தொந்தரவு செய்கிறார்களாம். குறிப்பாக  தூர் என முடியும் ஆறெழுத்து காவல்நிலையத்தில், ஆறெழுத்து துணை அதிகாரியானவர் சத்திரம் என முடிகிற, ஒன்றியத்தின் வட பகுதியின் அத்தனை அரசு  மதுக்கடைகளிலும் தனி ராஜ்யம் நடத்தி வருகிறாராம். முறைப்படி விற்றபோதும், செல்போனில் முறைகேட்டினைப் போல படம்பிடித்தும், செய்தியாக்குவேன் என்பதால் கலங்கிப்போன கடைக்காரர்கள், தொகுதி அமைச்சருக்கும், மாவட்ட காவல் தலைமைக்கும் மனுக்களை குவித்து வருகிறார்களாம். இதன் எதிரொலியாக  மதுக்கடைகளை குறிவைத்து வசூல் நடத்தும் காக்கிகள் குறித்த பட்டியலும்  மாவட்டம் முழுக்க தயாராகி வருகிறதாம். இந்த பட்டியலில் ஆறெழுத்து பெயர் கொண்ட துணை அதிகாரி பெயர் முதலில் இருக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘போக்குவரத்து தொழிலாளர்களின் குறை என்ன…’’‘‘நாகர்கோவில்  – திருநெல்வேலி இடையே, நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகம்  சார்பில் தற்போது 18 என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கப்படுகின்றன.  நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டால் நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறில்  மட்டும் தான் இந்த பஸ் நிற்கும். இடையில் வேறு எங்கும் நிற்காது என்பதால்  பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அலுவலக வேலை நாட்கள், முகூர்த்த  நாட்களில் இந்த பஸ்களில் கூட்டம் அலைமோதும். அதிகாலை 3.45க்கு என்ட் டூ  என்ட் முதல் பஸ், நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும். ஒவ்வொரு  பஸ்சும் 4 டிரிப் இயக்கப்பட்டு வந்தன. அதன்படி நாகர்கோவிலில் இருந்து இரவு 8  மணிக்கு பின் என்ட் டூ என்ட் பஸ் இருக்காது. இதே போல் திருநெல்வேலியில்  இருந்து இரவு 9.30க்கு பின் என்ட் டூ என்ட் இருக்காது. ஆனால் தற்போது  போக்குவரத்து கழக அதிகாரிகள் கிலோ மீட்டர் கணக்கை காட்ட வேண்டும்  என்பதற்காக டீசல் வீணாகி போனாலும் பரவாயில்லை என கூறி, என்ட் டூ என்ட்  ஒவ்வொரு பஸ்சும் தலா 5 டிரிப் இயக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இதனால்  இரவு 10 மணிக்கு பிறகும் நாகர்கோவிலில்  இருந்து 2, 3 பயணிகளுடன் என்ட் டூ  என்ட் பஸ், திருநெல்வேலி செல்கிறது. அங்கிருந்து நள்ளிரவு 12 மணிக்கு  பயணிகளே இல்லாத நிலையில், காலியாக வந்து சேருகின்றன. இதனால் டீசல்  வீணாகிறது. எனவே செலவை குறைக்கும் வகையில் தேவையின்றி 5 டிரிப் என்பதை  மாற்றி, ஏற்கனவே இருந்தபடி 4 டிரிப் தான் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம்  வருமானம் அதிகரிக்கும். டீசலும் மிச்சமாகும் என போக்குவரத்து தொழிலாளர்கள்  கூறினர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஏழைகளின் ஊட்டியில ஏதேதோ நடப்பதாக புகார் வருதாமே..’’ ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல ஏழைகளோட ஊட்டி இருக்கிறது. எக்காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையே இருக்குதாம். இதனால, ஏழைகளின் ஊட்டிக்கு கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்றாங்க. இதுல விடுமுறைகள் நாட்களாக இருந்துச்சுன்னா, அதிகளவில சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக, சொகுசான தனியார் விடுதிகள், ரிசார்ட்டுகள் நீச்சல் குளத்தோட கட்டி வெச்சிருக்காங்க. இதில் ஒரு சில தங்கும் விடுதிகள்ல, மசாஜ் என்ற பெயரில், வெளிமாநிலங்கள்ல இருந்து அழகிகளை கொண்டு வந்து ஏதேதோ நடத்துறதாக புகார்கள் எழுந்திருக்குது. இதுல சில தங்கும் விடுதிகள் அனுமதியில்லாமலேயே இயங்கி வர்றதாக சொல்றாங்க. காக்கி அதிகாரிகளும் இதனை கண்டுக்கறதில்லையாம். மாவட்ட அதிகாரிகளும் கண்டுக்கறதில்லையாம். இனியாவது இதில் உரிய ஆய்வு செய்து, விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கணும்னு ஏழைகளின் ஊட்டியில இருந்து குரல் எழுந்திருக்குது’’ என்றார் விக்கியானந்தா. …

The post விஷயம் வெளியானதால் ஜூரத்தில் இருக்கும் கிளுகிளு அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Clucle ,Jurat ,Peter ,Nelakalanjiyam ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது