×

திருச்சி மத்திய சிறைமுகாமில் சாந்தனுக்கு மஞ்சள் காமாலை

 

திருச்சி, ஜன.26: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையாகி திருச்சி சிறைவளாக முகாமில் தங்கியுள்ள சாந்தனுக்கு மஞ்சள்காமாலை காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இலங்கை தமிழர்கள் மற்றும் நைஜீரியா, பல்கேரியா, வங்காளதேசம், இந்தோனேஷியா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த 130 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் தங்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து விடுதலை செய்யப்படும் வரை முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை புழல் சிறையில் இருந்து 12.11.2022 அன்று விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உள்துறை அனுமதி கிடைத்ததும் இவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் திருச்சி சிறைமுகாமில் உள்ள சாந்தனுக்கு கடந்த 2 நாட்களுக்கும் மேலாக கால் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் முன்னேற்றமும் இல்லாததால் நேற்று காலை திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post திருச்சி மத்திய சிறைமுகாமில் சாந்தனுக்கு மஞ்சள் காமாலை appeared first on Dinakaran.

Tags : Santhan ,Trichy Central Jail ,Trichy ,Rajiv Gandhi ,Trichy Jail Camp ,Trichy Government Hospital ,Tamil Nadu ,
× RELATED நாகப்பட்டினத்தில் பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது