×

தேனி மாவட்டத்தில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு: ஜன.28ம் தேதி நடக்கிறது

 

தேனி, ஜன. 26: தேனி மாவட்டத்தில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி வரும் ஜன.28ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு வனத்துறை சார்பில் திருவில்லிப்புத்தூர்-மேகலை புலிகள் காப்பகம் சார்பில் ஆண்டுதோறும் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இந்தாண்டு ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மேகமலை வனக்கோட்டத்தில் உள்ள கண்டமனூர், வருசநாடு வனச்சரகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 இடங்கள், சின்னமனூர் வனச்சரகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 இடங்கள், ஹைவேவிஸ் பகுதி மற்றும் கம்பம் கிழக்கு வனச்சரக பகுதி, கூடலூர் வனச்சரகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 இடங்கள் என மொத்தம் 25 இடங்களில் வரும் 28ம் தேதி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடர்பாக வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலக வளாகத்தில் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தலைமையில் பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. இப்பயிற்சியில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே, பதிவு செய்த தன்னார்வலர்களும் பங்கேற்கலாம். கணக்கெடுப்பு பணி சுலபமாக மற்றும் விரைவாக முடிக்க பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 3 வனப்பணியாளர்கள் மற்றும் 2 தன்னார்வலர்கள் இடம் பெறுவர்.

தன்னார்வலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடும் பகுதி குறித்து பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கும், கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிகளில் கலந்து கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான விபரங்களுக்கு வனச்சரக அலுவலர் சாந்தினியை 96260 44211 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

The post தேனி மாவட்டத்தில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு: ஜன.28ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Theni District ,Theni ,Tamil Nadu Forest Department ,Thiruvilliputtur-Mekalai Tiger Reserve ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் தினமும் சதம் அடிக்கும் வெயில்: பொதுமக்கள் அவதி