×

முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்

 

சேலம், ஜன.26:தை பூசத்தையொட்டி சேலம் மாவட்ட முருகன் கோயில்களில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. வள்ளலார் கோயில்களில் சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது.
தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள், தேரோட்டம், சுவாமி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அதேபோல் ராமலிங்க வள்ளலார் கோயில்களில் சிறப்பு ஜோதி தரிசனம் நடக்கும். அதன்படி, நடப்பாண்டு தைப்பூச விழா நேற்று முருகன் கோயில்களில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவையொட்டி சேலம் அம்மாப்பேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமி, பாவடிதெரு முருகன், ஊத்துமலை முருகன், காவடி பழனியாண்டவர், குமரகிரி தண்டாயுதபாணி, சித்தர்கோயில், கந்தாஸ்ரமம், பேர்லண்ட்ஸ் முருகன், ஆத்தூர் வடசென்னிமலை முருகன், ஏற்காடு அடிவாரம் அறுபடை முருகன், புத்திரகவுண்டன்பாளையம் 146 அடி முருகன் உள்பட மாவட்டத்தில் உள்ள முருகன், சிவன், அம்மன், விநாயகர் கோயில்களில் உள்ள மூலவர், உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது. ஒரு சில கோயில்களில் தேரோட்டம் நடந்தது.

இதேபோல் அம்மாப்பேட்டை ராமலிங்கசுவாமி மடாலயத்தில் நேற்று காலை சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது. குகை ராமலிங்க சுவாமி மடாலயம், சுகவனேஸ்வரர் கோயிலில் உள்ள வள்ளலார் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள ராமலிங்க சுவாமி மடாலயம், வள்ளலார் கோயில்களில் சிறப்பு ஜோதி தரிசனம், அன்னதான விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Murugan ,Salem ,Valli ,Deivanai ,Tai Poosa ,Vallalar ,Murugan Temples ,Poosa ,Tai ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...