×

தொடர் விடுமுறை எதிரொலி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

 

ஊட்டி, ஜன. 26: தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் வார விடுமுறை என நான்கு நாட்கள் விடுமுறை வந்த நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

வாரவிடுமுறை பொங்கல் பண்டிகை விடுமுறை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். கடந்த ஒரு வாரமாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று தைப்பூசம், இன்று குடியரசு தினம் மற்றும் தொடர்ந்து வார விடுமுறை என நான்கு நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதனால், நேற்று முதலே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயரத்துவங்கியது.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், இன்று முதல் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்துள் மக்கள் கூட்டத்தால் களைகட்ட வாய்ப்புள்ளது. மேலும், இங்குள்ள அனைத்து லாட்ஜ், காட்டேஜ் மற்றும் ரெசார்ட்டுக்களும் நிரம்ப வாய்ப்புள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகையால் நேற்று ஊட்டியில் உள்ள தாவரவில் பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது, நீலகிரி மாவட்டத்தில் உறைப்பனி பனி பொழிவு காணப்படுவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது. இருந்த போதிலும், வெம்மை ஆடைகளுடன் சுற்றுலா பயணிகள் நகரில் வலம் வருகின்றனர். குளிர் அதிகமாக உள்ளதால், வெம்மை ஆடை வியாபாரமும் அதிகரித்துள்ளது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post தொடர் விடுமுறை எதிரொலி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Thaipusam ,Republic Day ,
× RELATED பூங்கா சாலையோர கால்வாயில்...