×

விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜரானாரா, இல்லையா? டிசம்பர் 12ம் தேதி நடிகர் இளவரசு எங்கு இருந்தார்?: தொலைபேசி அழைப்புகளை தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், நடிகருமான இளவரசு கடந்த டிசம்பர் 12ம்தேதி எங்கு இருந்தார் என்பது குறித்த மொபைல் லோகேஷன் விவரங்களையும், தொலைபேசி அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக பாண்டிபஜார் காவல்நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி, கடந்த 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 4 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்ததது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணையை முடிக்கவில்லை எனக் கூறி ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவமதிப்பு வழக்கு கடந்த டிசம்பர் மாதம் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் டிசம்பர் 13ம்தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அப்போது ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறையின் இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல் ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளரும் நடிகருமான இளவரசு கடந்த டிசம்பர் 12ம் தேதி காவல்நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக காவல்துறை அந்த தேதியில் அவர் காவல்துறை முன்பு ஆஜரானதாக கூறுவது தவறு என்று குறிப்பிட்டார். உடனே, குறுக்கிட்ட காவல்துறை வழக்கறிஞர் டிசம்பர் 12ம் தேதி நடிகர் இளவரசு காவல்நிலையத்தில் ஆஜரான சிசிடிவி காட்சிளை சமர்ப்பித்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த இளவரசு தரப்பு வழக்கறிஞர் டிசம்பர் 13ம் தேதி தான் அவர் காவல்நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். டிசம்பர் 12ம் தேதி இளவரசு மகாபலிபுரத்தில் படப்பிடிப்பில் இருந்தார். காவல்துறையினரின் சிசிடிவி காட்சிகள் போலியானவை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, டிசம்பர் 12ம் தேதி இளவரசு எங்கு இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சிடிஆர் என்று சொல்லக்கூடிய மொபைல் அழைப்பு விவரங்களையும் ஜனவரி 29ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

The post விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜரானாரா, இல்லையா? டிசம்பர் 12ம் தேதி நடிகர் இளவரசு எங்கு இருந்தார்?: தொலைபேசி அழைப்புகளை தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Prince ,HC ,CHENNAI ,Chennai High Court ,South Indian Film Cinematographers Association ,general secretary ,Illasaru ,High Court ,Dinakaran ,
× RELATED ராகுல் இளவரசர் என்றால் அரண்மனையில்...