×

தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழு விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: விநாயகர் சதுர்த்தியின் போது அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கும்படி தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதால் மாசு ஏற்படுகிறது என கூறியும், அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் திருத்தப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில், மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில், பொதுத் துறை செயலாளர், வருவாய் நிர்வாகத் துறை கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலில் மனுதாரர் தரப்பில், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு சிலைகளை தயாரிக்க மதுரை கிளை தடை விதித்துள்ளது குறித்து விரிவான விளம்பரம் கொடுத்தால் மட்டுமே அந்த வகை சிலைகள் உற்பத்தியை தடுக்க முடியும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் திருத்தியமைக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில், விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களுக்கு முன் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

தொடர்ந்து தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தீர்ப்பாயம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், அரசு அளித்த அறிக்கைகளை மேற்கோள் காட்டி, சிலைகள் கரைப்பதால் நீர் நிலைகள் மாசடைவது மட்டும் அல்லாமல், சிலைகளின் கரையாத பாகங்கள் எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அந்த பகுதியை சுத்தப்படுத்த வேண்டிய சுமை அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏற்படுகின்றது, எந்தெந்த நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என அறிவிக்கும் அதிகாரிகள், அதற்காக எந்த கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. அறிவிக்கப்படாத நிலைகளில் சிலை கரைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளது. அறிவிக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்குவதற்கு கட்டணம் நிர்ணயிக்கும்படி, சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவிற்கு தீர்ப்பாயம் உத்தரவிடுகிறது.

சிலையின் அளவிற்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், அறிவிக்கப்படாத நீர் நிலைகளில் சிலைகளை கரைத்தால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்து விநாயகர் சதுர்த்திக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே விளம்பரங்கள் தமிழக அரசு வெளியிட வேண்டும். சிலைகள் கரைப்பதற்காக வசூலிக்கப்படும் கட்டணத் தொகையை அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளின் பராமரிப்பிற்கு பயன்படுத்த வேண்டும். ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு 6 மாதங்களுக்கு முன்பே அரசு செயலாளர் தலைமையிலான குழு கூடி, செயற்கை குளங்கள் உருவாக்குவது, எந்தெந்த நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கலாம், பிளாஸ்டர் ஆஃப் பாரீசில் சிலைகள் உற்பத்தி செய்யப்படுவதை தடுப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

 

The post தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழு விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Environment Secretary ,Ganesha ,National Green Tribunal ,CHENNAI ,South Zone National Green Tribunal ,Environment Department ,Tamil ,Nadu ,Vinayagar Chaturthi ,Tamil Nadu Environment Department ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை