×

ஐதராபாத்தில் 2வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசு அதிகாரி வீட்டில் 2 கிலோ தங்கம் பறிமுதல்: 300 கோடி ஆவணங்கள் சிக்கியது

திருமலை: ஐதராபாத்தில் 2வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் அரசு அதிகாரி வீட்டில் ரூ.40 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்க நகைகளுடன் ரூ.300 கோடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்ட அதிகாரியாகவும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய செயலாளராகவும் இருப்பவர் சிவபால கிருஷ்ணா. இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென சோதனை மேற்கொண்டனர். மேலும் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர் வீடுகள் என பல இடங்களில் ஒரே நேரத்தில் 14 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்றும் 2வது நாளாக சோதனை நீடித்தது. அதில் சந்தை மதிப்பில் ரூ.300 கோடிக்கு மேல் அசையா சொத்துக்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், அதிகாரி சிவபாலகிருஷ்ணாவின் 4 வங்கி லாக்கர்களும் கண்டறியப்பட்டுள்ளது.

அதனை திறந்தால் மேலும் பல கோடி சொத்துக்களுக்கான ஆவணங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம், நிலையான சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், 60 விலை உயர்ந்த வாட்சுகள், 14 ஸ்மார்ட் போன்கள், 10 லேப்டாப் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஐதராபாத் சுற்று பகுதியில் பல ஏக்கரில் நிலம், வில்லா, பிளாட்கள் என அவர் சொத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிவபாலகிருஷ்ணாவின் வீட்டில் பணம் எண்ணும் இயந்திரங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த சொத்துக்கள் அனைத்தும் (ஹெச்எம்டிஏ) ஐதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் இயக்குநராக இருந்ததில் இருந்து தற்போது வரை சேர்த்திருப்பது தெரியவந்தது.

 

The post ஐதராபாத்தில் 2வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசு அதிகாரி வீட்டில் 2 கிலோ தங்கம் பறிமுதல்: 300 கோடி ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Anti-corruption ,Hyderabad ,Tirumala ,Telangana State ,Metro Rail Project Officer ,Anti-Bribery Department ,Dinakaran ,
× RELATED மின்வாரிய அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை..!!