×

மாவட்ட பெண் நிர்வாகியை வீடுபுகுந்து தாக்கிய விவகாரம் பாஜ பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவு: கைது செய்ய உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை தீவிரம்

சென்னை: பிரதமர் மோடி வருகையின் போது ஆட்களை அழைத்து வர பாஜ விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ரூ.50 ஆயிரம் பணத்தை பாஜ மாவட்ட துணை தலைவர் ஆண்டாள் என்பவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் சொன்னபடி ஆட்களை அழைத்து வரவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆட்களை அழைத்து வர கொடுத்த ரூ.50 ஆயிரத்தை திரும்ப கேட்டு அமர்பிரசாத் தனது ஓட்டுனரான சைதாப்பேட்டை கிழக்கு மண்டல துணை தலைவராக உள்ள ஸ்ரீதர் மற்றும் பெண் நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி மற்றும் 3 பேரை கோட்டூர்புரத்தில் உள்ள ஆண்டாள் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தேவி ஆகியோரை வீடு புகுந்து ஸ்ரீதர் மற்றும் அவருடன் வந்த பெண் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தினர். அதில் தேவி படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக பாஜ பெண் நிர்வாகி ஆண்டாள், சகோதரி தேவி ஆகியோர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

புகாரின்படி, கோட்டூர்புரம் போலீசார் பாஜ மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத், சைதாப்பேட்டை கிழக்கு மண்டல துணை தலைவரும் அமர்பிரசாத் ஓட்டுனருமான ஸ்ரீதர், பாஜ பெண் நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி உள்பட 6 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147, 452, 323, 324, 354, 427, (506)(1), 109 குற்றச்செயலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அமர்பிரசாத் கார் ஓட்டுனரான பாஜ நிர்வாகி ஸ்ரீதரை அதிரடியாக நேற்று போலீசார் கைது செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்த விவரங்களை அறிந்து கொண்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் அமர் பிரசாத் ரெட்டியை தேடி வருகின்றனர்.

இவர், ஏற்கனவே அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்பட 5க்கும் மேற்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அண்ணாமலைக்கு நெருக்கமான அமர் பிரசாத் ரெட்டி, அந்த தைரியத்தில் கட்சி நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். தற்போது கட்சி நிர்வாகி கொடுத்த புகாரால் தலைமறைவாகி விட்டார்.

The post மாவட்ட பெண் நிர்வாகியை வீடுபுகுந்து தாக்கிய விவகாரம் பாஜ பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவு: கைது செய்ய உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Amar Prasad Reddy ,Chennai ,vice president ,Andal ,Modi ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...