×

முத்துக்கள் முப்பது: நலன்களை அள்ளி வழங்கும் நட்சத்திர விழாக்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

(தையில் வரும் பூசம், கிருத்திகை, அமாவாசை, அஷ்டமி, சப்தமி)

தைப்பூசம் 25 – 1 – 2024

1. முன்னுரை

தமிழ் மாதங்கள் 12. நட்சத்திரங்கள் 27. திதிகள் 15. மாதங்களும் திதிகளும் இணைந்து சில மகத்தான பண்டிகைஅல்லது விரத நாட்களாக மலரும். அதைப் போலவே மாதங்களும் நட்சத்திரங்களும் இணைந்து சில மகத்தான தினங்களாக மலரும். உதாரணமாக சித்திரையில் திருவாதிரை ராமானுஜரின் அவதார நாள். வைகாசியில் விசாகம் முருகனுக்கு உரிய நாள். நம்மாழ்வாரின் ஜெயந்தி நாள். ஆனியில் சுவாதி கருடாழ்வாரின் ஜெயந்தி நாள். ஆடியில் கிருத்திகை முருகனுக்கு உரிய நாள்.

ஆவணியில் அவிட்டம் மிகச் சிறப்பான பண்டிகை நாள். புரட்டாசியில் திருவோணம் திருப்பதியில் பிரம்மோற்சவம் கொண்டாடும் நாள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் தையில் வரும் பூச நட்சத்திரம் அற்புதமான நாள். தைப்பூசம் மற்றும் தை கிருத்திகை, தை. அமாவாசை இவற்றின் சிறப்புகளை முப்பது முத்துக்களாக நாம் காண இருக்கின்றோம்.

2. பீஷ்மர் காத்திருந்த மாதம்

தை மாதம் மகர ராசிக்கு உரிய மாதம். உத்தராயணத்தின் முதல் மாதம் தை. இந்த மாதத்தில்தான் தெற்கு முகமாக சஞ்சரித்த சூரியன் வடக்கு முகமாக அடி எடுத்து வைக்கின்றார். அதனால் இது புனிதமான தினமாக கொண்டாடப்படுகிறது. உத்தராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்துத் தான்மஹாபாரதத்தில் பீஷ்மாச்சாரியார் அம்புப் படுக்கையில் காத்திருந்தார். அதனால் தையில் வரும் அஷ்டமி தினம் பீஷ்மாஷ்டமி என்று வழங்கப்படுகின்றது. பீஷ்மாஷ்டமி அன்று, ஒருவர் தன்னுடைய முன் னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியையும், பீஷ்மரின் ஆசியையும், ஒருசேரப் பெறலாம்.

3. சுப காரியங்களுக்காக காத்திருக்கும் மாதம்

தை மாதத்தின் தொடக்கம் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. காரணம், தட்சணாயணத்தின் கடைசி மணித்துளியும், உத்திராயணத்தின் முதல் மணித்துளியும் உறவாடும் உன்னத நேரமல்லவா அது. அப்பொழுது செய்யப்படும் வழிபாடும், தானமும், தவமும் நூறு மடங்கு பலனைத் தரும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. தை மாதம் மகர மாதம் என்று பார்த்தோம். காரணம் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம்தான் தை மாதம்.

இந்த மகர ராசி என்பது சனி கிரகத்துக்குரிய ராசி. காலச்சக்கரத்தின் பத்தாவது ராசி. கர்ம ராசி. இந்த ராசியில் சூரியன் நுழைந்தால், அந்த மாதம் புனிதமானதாகக் கருதி பற்பல சுப காரியங்களைத் தொடங்கி நடத்துகின்றனர். தை மாதம் எப்போது பிறக்கும், திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தலாம் என்று காத்திருக்கின்றனர். தேவர்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரம் 12 மாதங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. தை மாதம் என்பது விடிகின்ற காலை 6 மணி முதல் 8 மணி வரை உள்ள 2 மணி நேரத்தைக் குறிக்கும் என்பதால் தை மாதத்தை விடியல் நேரம் என்று ஆன்மிக ரீதியில் சொல்லுவார்கள்.

4. தையில் செயல்;மாசியில் பலன்

தை மாதம் சனிக்குரிய மகர ராசி மாதம் என்று பார்த்தோம் அல்லவா. அடுத்து வரும் மாசி மாதமும் சனிக்குரிய மாதம் தான். தை மாதத்தில் செய்யும் கருமங்கள் அதாவது செயல்கள், மாசி மாதத்தில் லாப ராசியாக நற்பலன்கள் அளிக்கும். அது தானமாக இருக்கலாம். வழிபாடாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் மாசியில் அதனுடைய பலன் கிடைக்கும்.

5. இந்த ஆண்டு தைப்பூசம் வரும் நாள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள். ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் 27 நட்சத்திரங்களும் வரும். இதில் சூரியனுக்குரிய கிருத்திகை நட்சத்திரமும், சனிக்குரிய பூச நட்சத்திரமும் மிகச் சிறப்பானது. காரணம் சனியின் ராசியில் சூரியன் பிரவேசிக்கிறார். இன்னும் ஒருவகையில் பார்க்கப் போனால், சூரியன்தான் தலைமைக் கிரகம். அவர்தான் பிதா எனும் தந்தைக்கு உரியவன். ஆத்மகாரகன். அவருடைய பிள்ளைதான் சனி.

எனவே, பிள்ளையின் ராசியில் தந்தை பிரவேசிக்கும் காலம் என்பதால் இருவருக்குரிய நட்சத்திரங்களும் (கிருத்திகையும், பூசமும்) சிறப்பு பெறுகின்றன. தை மாதமாகிய மகரத்தில் சூரியன் இருக்க, நேர் எதிர் மாதமாகிய கடகத்தில் மகர வீட்டுக்குரிய சனியின் பூச நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க, இந்த விசேஷமான பின்னணியில் கொண்டாடுவதுதான் தைப்பூசம். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் ஒவ்வொரு கிழமையில் வரும். இந்த ஆண்டு குருவுக்குரிய வியாழக்கிழமையில், பௌர்ணமியில், அமிர்த யோகத்தில் பிறக்கிறது. எனவே, குருவின் பூரண அருளும் கிடைக்கிறது.

6. முருகனின் அருள் மலரும் தைப்பூசம்

தைப்பூசம் என்பது இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் வாழும் நாடுகளில் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். அமெரிக்கா, ஸ்விட்ஜர்லாண்ட், ஜெர்மனி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், குறிப்பாகமத்திய ஐரோப்பா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். கேரளாவில் தைப்பூயம் என்று அழைக்கப்படுகிறது. பூசம் எட்டாவது நட்சத்திரம். எண் கணிதப்படி 8 என்பது சனியைக் குறிக்கும். சனி நீதி பரிபாலனத்தைக் குறிக்கும். பத்தாம் இடத்தில் என்ன விதைக்கிறோமோ, அது பதினொன்றாம் இடத்தில் அறுவடையாகும். நல்ல கர்மாவை செய்வதன் மூலமாக நன்மை அடையலாம் என்பதைச் சொல்பவர் சனி.

7. தைப்பூசத்தின் பழமை

தைப்பூச விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகளுள்ளன. குறிப்பாக பொருந்திய ‘‘தைப்பூசமாடிஉலகம் பொலிவெய்த” என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். உலகில் முதன்முதலாக நீர் தோன்றியதும் அதில் முதல் உயிரினம் தோன்றியதும் ஒரு தைப்பூச நன்நாளில் தான் என்கின்றன ஞான நூல்கள். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தபட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடந்ததாககல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

8. பொங்கல்

மார்கழியில் நிறுத்தப்பட்டிருந்த சுப காரியங்கள் எல்லாம் தை மாதத்தில் தொடங்கும். தை மாதம் முதல் நாள் இப்போது பொங்கல் பண்டிகை வைத்தாலும் கூட, ஒரு காலத்தில் தையில் அறுவடை செய்த புது நெல்லை, பூச நட்சத்திர நாளன்று பொங்கல் வைத்து கொண்டாடுகின்ற வழக்கமும் இருந்தது இது குறித்த பல குறிப்புகள் இலக்கியங்களில் இருக்கின்றன. தையில் தான் பொங்கல் பண்டிகை வருகிறது. தையில் தான் வெள்ளிக்கிழமை விசேஷம். சைவத்தில் எல்லா அம்பாள் கோயில்களிலும், திருமால் ஆலயங்களில் எல்லா தாயார் சந்நதிகளிலும் தை வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

9. பூச நட்சத்திரம் சுப நட்சத்திரம்

தை பூச நட்சத்திரம் விசேஷமானது. ஒவ்வொரு கிரகத்துக்கும் 3 நட்சத்திரங்கள் உண்டு. சனிக்கு உரிய நட்சத்திரம் பூசம், அனுஷம், உத்திரட்டாதி. இவைகள் எல்லாம் 4,8,12 ம் ராசிகளில் அமைந்திருக்கின்றன. வினைப் பயனை தீவிரமாக நிர்ணயம் செய்யும் ராசிகள் இவைகள். சனியினுடைய முதல் நட்சத்திரமான பூசம், காலச்சக்கரத்தின் நாலாவது வீடான கடக ராசியில் இருக்கிறது. இது சுப நட்சத்திரம் என்பார்கள். பதவி ஏற்கவும், சபையைக் கூட்டவும், சீமந்தம் முதலிய விசேஷங்கள் செய்யவும், பசுமாடு வாங்கவும், வாஸ்து சாந்தி செய்யவும், திருமணம், கிரகப்பிரவேசம் முதலிய விசேஷங்களைச் செய்யவும், யாத்திரை மற்றும் வெளிநாடு பிரயாணம் செய்யவும் ஏற்ற நட்சத்திரம் பூசம் நட்சத்திரம். பூச நட்சத்திரம் கடக ராசியில் இருக்கிறது.

10. மதியும் விதியும்

கடக ராசி சந்திரனுடைய ஆட்சி வீடு. சந்திரனை “மதி” என்று சொன்னார்கள் அந்த கடக ராசியின் நேர் ஏழாவது ராசி தான் தை மாதத்திற்குரிய மகர ராசி. அப்படியானால் என்ன பொருள்? நான்காவது ராசி மனம், சுகம் அல்லவா? அதனுடைய நேர் எதிர் விளைவு தான் கர்ம ராசி. எனவே மனத்தை ஒழுங்கு செய்தால் கர்மாவை ஒழுங்கு செய்யலாம் என்பதைக் காட்டுவது தை மாதம் பூச நட்சத்திரம். இதைத்தான் திருமூலரும் மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்று குறிப்பால் உணர்த்தினார். அதற்கு இறையருள் வேண்டும் என்பதற்காகத்தான் பூச நட்சத்திர நாளில் எல்லாக் கோயில்களிலும் சிறப்பான விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்.

11. பூசத்தில் முருகனை வணங்க புகழும் புண்ணியமும் சேரும்

மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். செவ்வாய் என்பது முருகப்பெருமானைக் காட்டும் கிரகக் குறியீடு. பெண் தெய்வமாக இருந்தால் துர்க்கையைக் குறிக்கும். அதனால்தான் தை மாதம் வெள்ளிக்கிழமை அம்பாளையும், பூசத்தில் முருகப்பெருமானையும் வணங்கி, எட்டாத இலக்கையும் எட்டுகின்றனர். எட்டு என்பது துன்பத்தைக் குறிப்பதால் அந்தத் துன்பத்தையும் முருகப்பெருமான் வழிபாட்டின் மூலம் நீக்கிக் கொள் கின்றனர். சனியின் ஆதிக்கம் கடுமையாக இருக்கும் போது (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டம சனி) அதே சனி நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் சனியின் மகர ராசியில் உச்சம் பெறும் முருகனை வணங்கி நிவாரணம் பெறுகின்றனர்.

12. காலன் கொண்டு சென்ற உயிரை மீட்ட தைப்பூசம்

தைப்பூசம் என்றாலே நமக்கு பல கதைகளும் பல பண்டிகைகளும் இணைந்து நினைவுக்கு வரும். அதில் ஒரு கதை தான் இறந்து போய் எரியூட்டப்பட்ட சாம்பலில் இருந்து உயிர் ஊட்டப்பட்ட ஒரு பெண்ணின் கதை. அந்தப் பெண்ணின் பெயர் பூம்பாவை. அவளுடைய தந்தையின் பெயர் சிவநேசர். தமிழ் ஞானசம்பந்தரிடம் அளவற்ற அன்பு கொண்டவர். சிவபக்தியில் தலை சிறந்தவர். இந்த நிகழ்வு நடந்த இடமோ சென்னை திருமயிலை.

அக்காலத்தில் திருமயிலையில் தைப்பூச விழா எத்தனை சிறப்பாக நடைபெற்றது என்பதற்கு திருஞானசம்பந்தரின் பாடலே சாட்சி. ‘‘தைப்பூச விழாவை காணாமல் சென்று விட்டாயா பூம்பாவாய்?’’ என்று அந்த விழாவைக் குறித்து அந்த பாடலில் பாடுகின்றார் ஞான சம்பந்தர். தமிழின் வீரியமும், தைப்பூசத்தின் சீர்மையும், காலன் கொண்டு சென்ற உயிரையும் மீட்டு வந்தது என்பது பெருமை அல்லவா! இனி அந்தக் கதை.

13. கன்னிகாதானம்

இந்திய சமய மரபில் திருமணச் சடங்கு களில் கன்னிகாதானம் என்று ஒரு நிகழ்வு உண்டு. பொதுவாக ஆண் பிள்ளை பெற்றவர்கள் அந்த பிள்ளை முறையாகச் செய்யும் கர்மச் சடங்குகளால் “புத்” என்ற நரகத்தை அடையாமல் காக்கப்படுவார்கள் என்றொரு கருத்தை கருட புராணம் சொல்கிறது. எல்லாப் புராணங்களிலும் இக்கருத்து உண்டு. அப்படியானால் பெண்ணைப் பெற்றவர்களுக்கு என்ன கதி என்கின்ற கவலை எழுகிறது அல்லவா? அந்தக் கவலையையும் தீர்த்து வைக்கிறது சாத்திரம். பெண்ணைப் பெற்றவர்கள் தகுந்த வரனைத் தேடி, அந்தப் பெண்ணை மந்திர பூர்வமாக கன்னிகாதானம் செய்து கொடுத்துவிட்டால்.அந்தப் பெண்ணின் பெற்றோரோடு சேர்ந்து, முன்னாள் 10 தலைமுறையும், பின்னால் பத்து தலைமுறையும் ஆக 21 தலைமுறைகள் ஈடேறும்.

14. பெண்ணை பெற்றவருக்கு கிடைக்கும் பாக்கியம்

அதற்கான மந்திரத்தை கன்னிகாதானம் செய்து கொடுக்கும் போது சங்கல்பமந்திரமாகச் சொல்வார்கள்.

‘‘தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத
விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம்
கர்த்தும்

யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண”. தசாநாம் பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள். தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள். ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெரும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது.

15. சிவநேசரின் விருப்பம்

அதனால் அக்காலத்து பெற்றோர்கள் ஞானத்திலும் தானத்திலும் பக்தியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த ஒருவருக்கு தன்னுடைய பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டும் என்றே விரும்புவார்கள் அதன் மூலமாக வருகின்ற சந்ததி மிகச் சிறந்த சந்ததியாக இருக்கும் என்கின்றநம்பிக்கை உண்டு. இதைத்தான் சிவநேசர் விரும் பினார்.திருமயிலை தலத்தில் அவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள்.

திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமயத் தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்தபோது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்துவிட்ட போதிலும் அவள் திரு ஞானசம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னிமாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

16. திருமயிலையில் காணலாம்

திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர், அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விவரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை” என்று தொடங்கும் பதிகம் பாடினார்,

“மட்டிட்ட புன்னையங்
கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின்
உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே
போதியோ பூம்பாவாய்.
மைப்பூசும் ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல்
நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே
போதியோ பூம்பாவாய்.’’

17. நெய்யொழுகும் சிறந்த பொங்கல்

பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு சாம்பலில் இருந்து வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்துவந்தாள்.

திருமயிலை கபாலி கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. திருமயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறு பூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர், நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப் பூசவிழாவைக் காணாது செல்வதுமுறையோ? என்ற பாடலின் மூலம் பொங்கல் படைத்தது பூச நாள் கொண்டாடிய வரலாறு அறிகிறோம்.

18. சிதம்பரமும் தைப்பூசமும்

சைவத்தில் கோயில் என்றால் சிதம்பரத்தைக் குறிக்கும். அந்தச் சிதம்பரத்திற்கும் தைப்பூசத் திருநாளுக்கும் ஒரு இணைப்பு உண்டு. தில்லை வனமாக இருந்த, சிதம்பரம் நடராசப் பெருமான் ஆலயத்தை, முதற்கண் கட்டட அமைப்புகளுடன் கூடிய திருவிடமாக ஆக்க முற்பட்டவன் இரணியவர்மன். அவனுக்குப் பிறகு, சோழர்களும் பாண்டியர்களும் விசயநகர – நாயக்க மன்னர்களும் பெரும் பொருட்செல்வர்களும் ஆலய வளாகத்தில் பல சிற்றாலயங்கள் கட்டி, அதனை விரிவாக்கியுள்ளனர். நடராஜரை இரணியவர்மன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. சிவபெருமான் உமா தேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப் படுகின்றன.

19. தைப்பூசமும் முருகனும்

தைப்பூசத் திருவிழா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முருகப் பெருமான்தான். முருகப் பெருமானுக்கு எண்ணற்ற ஆலயங்கள் இருக் கின்றன ஒவ்வொரு ஆலயத்திலும் தைப்பூசத் திருவிழா மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும். தைப்பூசம் அன்று உற்சவங்கள் இல்லாத முருகப் பெருமான் கோயிலே இல்லை என்று சொல்லலாம் தை பூச நாளிலே முருகப்பெருமான் – வள்ளியம்மை திருமணம் நடை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

தைப்பூசத்தன்று முருகப்பெருமானின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் வளம் பெருகும், சகல பாவங்களும் தீரும் என்கிறார்கள். மேலும் இந்த நாளில் தான-தர்மங்கள், ஜபதபங்கள், ஹோமங்கள் போன்ற சுப காரியங்கள், செய்தால் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும். நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் முருகப் பெருமான் கோயில்களில், தைப்பூச திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். மலேசியா, சிங்கப்பூர் பினாங்கு, மத்திய ஐரோப்பா நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நூற்றுக்கணக்கான நாடுகளில் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக்கொண்டாடப்படும்.

20. ஆறுபடை வீடுகள்

ஆனாலும், முருகனுக்கு மிக மிக விசேஷமான தலங்களாகச் சொல்லப்படுவது ஆறுபடை வீடுகள். ஆறுபடை வீடுகள் என்பது திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை. ஆறுபடை வீடுகள் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆறுபடை வீடுகள் என்பது குறித்து முதல் முதலில் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இலக்கியத்தில் வருகிறது. அதில் ஆறுபடை என்று வரவில்லை ஆற்றுப்படை என்று வருகின்றது. முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.

`ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் `வழிப்படுத்தல்’ என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை’’ எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. சமய தத்துவங்கள் ஒருவருடைய வாழ்க்கையின் உன்னதத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதற்காகவே ஏற்பட்டன. ஆறு என்றால் வழி என்று பொருள். ஒருவன் வாழ்வில் உயர்வும் உன்னதமும் பெற உய்வும் பெற என்ன வழி என்பதைக் காட்டுவதுதான் ஆறுபடை வீடுகள். ஆறுபடை வீடுகள் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

21. பூசத்தில் முருகனை வணங்க வினை அறுபடும்

ஆற்றுப்படை வீடுகளை அறுபடை வீடுகள் என்றும் சொல்வார்கள். ஏற்கனவே தை மாதம் என்பது வினைகளையும், வினைகளால் ஏற்படுகின்ற விளைவுகளையும் குறிக்கக்கூடிய மாதம் என்ற தத்துவத்தைப் பார்த்தோம். கர்மவினையின் சுழற்சியை அறுக்கின்ற வீடுகள் இந்த படைவீடுகள் என்பதால், அறுபடை வீடுகள் என்றும் சொல்வார்கள். கூரான ஞானவேல் கொண்டு நிற்கும் முருகப் பெருமானை, தைப்பூசம் அன்று அறுபடை வீடுகளிலும் வணங்குவதன் மூலமாக தீவினைகளை அடியோடு அறுத்துக் கொள்ளலாம்.

தைப் பூசத்தன்று முருகன், தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இக்கோயிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் வள்ளி தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனிவருவார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறும்.

22. திருத்தணியில் தைப்பூசம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி. ஆறுபடைவீடுகளில் ஐந்தாம்படைவீடு. நக்கீரரின் திருமுருகாற்றுப் படையிலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் பாடிய தலம். முத்துசாமி தீட்சிதர்இந்தத் தலத்து முருகப் பெருமானை போற்றிக் கீர்த்தனை பாடியிருக்கிறார். இங்கு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். தங்ககவசம், வைரகீரிடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்படும். பக்தர்கள் விரதமிருந்து உடலில் அலகு குத்தியும், காவடிகள் சுமந்துவந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவர்.

23. திருச்செந்தூர் தைப்பூசம்

முருகப் பெருமான், சூரசம்ஹாரம் செய்த கடற்கரைத் தலமான திருச்செந்தூரிலும், தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைமாதம் நடைபெற இருக்கும் தைப்பூச நிகழ்வுக்காக, மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதையாத்திரையாக திருச்செந்தூர் நோக்கி படையெடுக்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் முதலிய அருகாமை மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான ஊர்களில் இருந்து சாரிசாரியாகத் திருச்செந்தூர் நோக்கி, கால்நடையாக, பாடல்களைப் பாடிக் கொண்டே செல்லும் மக்கள் வெள்ளம் காணக் கிடைக்காதபரவசக் காட்சி. கொடியைப் பிடித்துக்கொண்டு, காலில் பாத அணி அணியாது, கிடைத்த வண்டிகளில் முருகப் பெருமானை அலங்கரித்து வைத்து, பாட்டு பாடிக் கொண்டே அவர்கள் செல்லுகின்ற பொழுது, உள்ள உணர்வு மற்ற மக்கள் மனதிலும் தைப்பூசத் திருநாளின்அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

24. இலங்கையில் தைப்பூசம்

இலங்கையில், அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று, சூரியனை வணங்கி, ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனை பூஜை அறையில் வைத்து, அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி பூஜை செய்து உண்பர். முருகன் கோயில்களில் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

25. மலேசியாவில் தைப்பூசம்

மலேசியாவில் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது பத்து மலை முருகன் கோயில். இது ஒரு மலைக்கோயில்; சுண்ணாம்புப் பாறைகளாலானது. மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோயில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்து மலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலிருந்து பத்து மலைக்கு ஊர்வலமாக நடந்து வருகிறார்கள்.

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலைகோயிலில் பினாங்கு தைப் பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியன் கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

26. பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய பூசம்

எல்லா சிவத்தலங்களிலும் தைப்பூசம் கொண்டாடப்பட்டாலும், நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிடைமருதூர்தான். இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாகும். சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

`வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த விடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.’

விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித்தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடிஉலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர் என்பது தேவாரம்.

27. வள்ளலாரும் தைப்பூசமும்

தைப்பூசம் என்றாலே அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது வள்ளலார். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலார். “அருட்பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி” என்று பாடிய வள்ளலார். இந்தியாவில் ஆயிரக்கணக்கான வள்ளலார் மன்றங்கள் இயங்குகின்றன. சிறு வள்ளலார் கோயில்கள் இயங்குகின்றன. அத்தனைக் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு அன்னதானம் நடத்தப்படும்.

28. வடலூரில் அன்னதான விழா

வள்ளலாரின் மிகப்பெரிய தத்துவம்

1. ஜீவகாருண்ய ஒழுக்கம்.
2. தனி மனித ஒழுக்கம்
3. உயிர்கள் இடத்தில் அன்பு.
4. செய்யவேண்டிய தொண்டில் மிகச் சிறந்த தொண்டு மனித குலத்தின் பசியைப் போக்குதல்.

புத்தரைப் போலவே ஒருவனுக்கு பசி இருக்கும்வரை அவனிடத்திலே எந்த ஆன்மிக எண்ணமும் எழுவதற்கு வழியில்லை என்று கண்டவர் வள்ளலார். 1867-ஆம் ஆண்டு, பார்வதிபுரம் என்ற ஒரு சிறு கிராமத்தில் 80 காணி நிலத்தை தானமாகப் பெற்று, சமரச சுத்த சன்மார்க்க தருமச் சாலையை நிறுவினார், வள்ளல் பெருமான். 1867-ஆம் ஆண்டு, மே மாதம், 23-ஆம் தேதி, இருபத்தி ஒரு அடி நீளம், 2.5 அடி அகலம் இரண்டரை அடி ஆழமுள்ள அணையா அடுப்பு ஏற்படுத்தினார்.

அன்று எரியத் தொடங்கிய அந்த அணையா அடுப்பு, 154 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. மனிதனின் பசி என்கின்ற நெருப்பு அணையவேண்டும் என்று சொன்னால், இந்த அணையா அடுப்பு எரிய வேண்டும். இந்த அணையா அடுப்பை எரியவிட்டால், மனிதனின் பசிப்பிணி நீங்கிவிடும். எனவே, இதைத்தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று இந்த தர்ம சாலையை ஏற்படுத்தினார்.

இன்றளவும், வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப் படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள், பசியாற்றுகிறார்கள். 150 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு ஜனவரி மாதம் தைப்பூசத் திருநாளில்தான் சத்தியஞான சபையைத் தொடங்கினார். ஏழு திரைகளை விளக்கி, ஜோதி தரிசனத்தை காட்டும் உன்னத விழாவான தைப்பூச திருவிழா, வடலூரில் பெருவிழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

29. தைமாத வெள்ளிக்கிழமை

ஜீவன் முக்தர்கள் தங்களுக்காகவும், தங்கள் ஆத்மாவுக்கும் முயற்சிசெய்து பிறப்பில்லாத நிலையை அடைவார்கள். ஆனால், அவதார புருஷர்கள் அப்படியல்ல. இந்த உலகத்தில் உள்ள ஜீவன்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே பிறப்பு எடுப்பார்கள். உலகத்தை காப்பதற்காக பிறப்பு எடுத்தவர்தான் வள்ளல் பெருமான். எனவே, அவர் அவதார புருஷன் என்பார்.

ஒரு தை மாத வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தன்றுதான் வள்ளலார், ராமலிங்க சுவாமிகள் ஒளியானார். வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக் குப்பத்தில், தைப் பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி, வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள். வள்ளலார், ராமலிங்க அடிகளார் தைப் பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்.

30. முடிவுரை

இப்படிப் பல சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். அதுவும் இந்த ஆண்டு தைப்பூசத்திற்கு, இன்னும் ஒரு சிறப்பு உண்டு. தை மாதம் என்று சொல்லப் படும் மகர ராசிக்கு உரிய சனிபகவான், ஆட்சி பலத்தோடு இந்த ஆண்டு இருக்கிறார். தைப்பூசத்தில்தான் ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் அவருடைய திருவுருவத்துக்கு சக்தி விசேஷத்தை அளித்தார். ஸ்ரீ பெரும்புதூரில், ஸ்ரீ ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். புறப்பாடு நடைபெறும். இதனை “குரு புஷ்ய உற்சவம்’’ என்பார்கள். புஷ்யம் என்பது தை மாதத்தைக் குறிக்கும். குருவுக்கு ஏற்றம் தரும் மாதம் இது. அதனால், வியாழக்கிழமை வருகிறது.

The post முத்துக்கள் முப்பது: நலன்களை அள்ளி வழங்கும் நட்சத்திர விழாக்கள் appeared first on Dinakaran.

Tags : Poosam ,
× RELATED வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப் பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது?