×

‘‘ஆவுடையார் மீது நின்றருளும் அரங்கன்!’’

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்பாற்கடல் எனும் அழகிய கிராமம். இக்கிராமத்தின் கடைக் கோடியில் அமைந்துள்ளது. பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில். இக்கோயில் மிகவும் பழமையானதும் புராதனமானது மாகும். பெரிய மண்டபமும், கருவறை விமானத்துடன் அமைந்த திருக்கோயில்.

ஆதியில் இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் முன்பு தூசேஸ்வரர் எனும் சிவன் கோயிலும், பக்கத்தில் அரங்கநாதர் கோயிலும் அமைந்திருந்தது. அரங்கன் கோயில் இன்றும் உள்ளது. திருப்பாற்கடல் கிராமத்தில் வீற்றிருக்கும் இறைவன் ரங்கநாதன் எனும் திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த காலகட்டத்தில் பகவானை உள்ளபடி சேவிக்க புண்டரீக மகரிஷி என்பவர் திருப்பாற்கடல் கிராமத்திற்கு வந்துள்ளார். இவர் வந்த போது அரங்கன் சந்நதியில் அரங்கனைக் காணவில்லை.

மிகுந்த ஏமாற்றத்துடன் அருகில் இருந்த தூசேஸ்வரர் சந்நதிக்குச் சென்று தேடினார். அவர் அங்கும் இல்லை. தீவிர வைணவ பக்தரான புண்டரீக மகரிஷ திருமாலை மட்டும் வழிபடுபவர். சிவனை வழிபட மாட்டார் இந்த நிலையில் அந்தக் கோயிலில் உள்ள சிவன் சந்நதியில் அரங்கன் இருக்கிறாரா என்று பார்த்தார். அங்கே சிவ லிங்கத் திருமேனியும் ஆவுடையாரும் இருப்பதைக் கண்டு மிகவும் வருத்த முற்றார்.

சிவன் சந்நதியை விட்டு வெளியேறும் போது சிவபெருமான் ஒரு வயோதிக வைணவ அடியார் திருக்கோலம் கொண்டு புண்டரீக மகரிஷியின் எதிரில் வந்து அவர் வருத்தப்படுவதற்கான காரணத்தைக் கேட்டார். மகரிஷி, ‘பெருமாளை சேவிக்க வந்தேன். அவர் சந்நதியைக் காணவில்லை’ என்று கூற, அதற்கு அடியார், ‘ஐயா, பெரியவரே! நீர் புகுந்து பார்த்து வந்த இடமே பெருமாள் சந்நதி தான். வந்து பாருங்கள்’ என்று அவரை திருப்பி அழைத்துக் கொண்டு வந்து.

தூசேஸ்வரர் கோயில் சந்நதிக்குள் வந்ததும், இறைவன் மாயமாக மறைந்தார். திடுக்கிட்ட புண்டரீக மகரிஷி சந்நதியைப் பார்க்க, அங்கே ஆவுடையார் மீது பெருமாள் நின்ற திருக்கோலத்தில் பிரசன்னராய் காட்சியளிக்க, மெய்சிலிர்த்து கண்களில் கண்ணீர் மல்க வணங்கி வழிபட்டார். ஹரியும் அரனும் ஒன்றே என்பதை உணர்ந்தார். மானசிகமாக இறைவனிடம் மன்னிப்புக் கோரினார்.

ஆவுடையார் மீது நின்றருளிய அந்த பெருமாளுக்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அந்த இடத்திற்கு ‘புண்டரீக க்ஷேத்திரம்’ என்று வழங்கப்படுவதாகவும் இக்கோயிலின் தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு பெருமாள், லிங்க பீடமான ஆவுடையார் மீது முழுவதும் நின்ற கோலத்தில் பிரசன்னமாக நின்று அருள்பாலித்து வருவதால் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு பெருமாளின் திருவுருவம்,புன்னகையுடன் சிரிப்பது போல் அமைந்திருப்பது கண் கொள்ளாக் காட்சியாகும். இக்கோயில் சிவ-விஷ்ணு தலமாகும். ஹரியும்-அரனும் ஒன்றே எனும் தத்துவத்தை விளக்கும் வண்ணம் இந்த சந்நதி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.இத்திருக்கோயிலில் தமிழ் மாதங்களில் வரும் அனைத்து விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகிறது.

மனித இனமானது தங்களுக்குள்ளேயே சண்டை, சச்சரவுகள், வேற்றுமை, போட்டி, பொறாமை, உயர்வு, தாழ்வு, ஏழை, பணக்காரன், இன, மொழி போன்றவைகளை ஏற்படுத்திப் பாழ்படுவதோடு இறைவனையும் வேறுபடுத்திப் பார்க்கிறது. ஆனால் இறைவன் அவர்களுக்கு ‘ஒன்றே தெய்வம் ஒருவனே தேவன்’ என்ற ‘கோட்பாட்டின் படி கடவுள் ஒன்றே’ என்னும் தத்துவத்தை விளக்குகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமாள், திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆவார்!

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post ‘‘ஆவுடையார் மீது நின்றருளும் அரங்கன்!’’ appeared first on Dinakaran.

Tags : Arankan ,Aoudaiyar ,Vellore ,Kaveri Bhakkam ,Tiruppalakadal ,Prasanna Venkatesh Perumal Temple ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...