×

இயற்கை முறையில் மனிதனுக்கான பொருட்களை கொடுக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

ஏவிஏ குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் ஏ.வி.அனுப்

பலவிதமான வாசனை மற்றும் நிறங்கள் கொண்ட சோப்புகள் மார்க்கெட்டில் இருந்தாலும், ஆயுர்வேத குணங்கள் கொண்ட சோப்புகளுக்கு இன்றும் பெண்களின் மத்தியில் தனிப்பட்ட விருப்பம் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் மெடிமிக்ஸ் சோப் சென்னை, கேரளா மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் பலரின் பிடித்தமான சோப்பாக இன்றும் உள்ளது. அனுப் அவர்கள் மெடிமிக்ஸ் சோப் நிறுவனம் மட்டுமில்லாமல் ஏவிஏ நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய 41 ஆண்டுகள் தொழில் பயணம் மூலம் சோப் தயாரிப்பு மட்டுமில்லாமல், பார்மசி மற்றும் உணவுத் துறையில் பல அனுபவங்களை பயின்றுள்ளார்.

‘‘நான் பிசினசில் ஈடுபட்டு 41 வருடங்களாச்சு. சொந்த ஊர் கேரளா. அப்பா மீன் வளத்துறையில் வேலை பார்த்தார். அவர் தவறிய பிறகு நாங்க சென்னைக்கு வந்துட்டோம். இங்கு என் மாமா தான் மெடிமிக்ஸ் நிறுவனத்தை துவங்கி நடத்தி வந்தார். அப்பா இறப்பிற்கு பிறகு என்னை அவரின் நிறுவனத்தில் சேரச் சொன்னார். 83ல் இருந்து இந்த நிறுவனத்தில் நான் இருக்கேன். 2011ல் மாமா இறக்கும் முன் மெடிமிக்சின் தென்னிந்தியா பிசினஸில் என்னையும் மற்ற பகுதியினை அவரின் மகன் பிரதீப்பிடமும் ஒப்படைச்சிட்டார்.

இதற்கிடையில் 2007ல் ஏவிஏ என்ற நிறுவனத்தை துவங்கினேன். ஆயுர்வேத சிகிச்சை மையமான ‘சஞ்சீவனம்’ மற்றும் மசாலா பொருட்களுக்கு ‘மேளம்’ என இரண்டு நிறுவனங்களையும் துவங்கினேன். முழுக்க முழுக்க ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கப்படும் மையமாகத்தான் சஞ்சீவனம் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் தங்கி இருந்து சிகிச்சை பெறும் வசதி போல் அமைத்திருக்கிறோம். சென்னையில் கன்சல்ேடஷன் மட்டும் என்பதால் இங்கு தங்கும் வசதிகள் கிடையாது’’ என்றவர் ஆயுர்வேதத்தில் ஈடுபட்ட காரணத்தைப் பற்றி விவரித்தார்.

‘‘எனக்கு ஆயுர்வேத சிகிச்சையினால் ஏற்பட்ட ஒரு அனுபவம் தான் சஞ்சீவனம் துவங்க காரணம். 25 வருடத்திற்கு முன்பு தீராத முதுகு வலியால் அவதிப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்ய சொன்னாங்க. எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. அப்போது தான் ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன். அறுவை சிகிச்சை தான் தீர்வு என்று நினைத்த எனக்கு ஆயுர்வேத சிகிச்சை பெரிய அளவில் பலனைக் கொடுத்தது. நான் பெற்ற சிகிச்சை முறை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அதற்கான வழி சிகிச்சை மையம் என்பதால், சிறந்த டாக்டர்கள் மற்றும் ஆய்வு வல்லுனர்கள் கொண்டு சஞ்சீவனம் துவங்கினேன். இங்கு எல்லாவிதமான சிகிச்சைகளும் அளித்து வருகிறோம்.

மேளம், பலவிதமான உணவுகள் மற்றும் மசாலா பொருட்களின் பிராண்ட். ஆகும். தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, கடலைகறி மசாலா போன்றவை மட்டுமில்லாமல் புட்டு பொடி, இன்ஸ்டன்ட் தோசை இட்லி வெரைட்டி மாவுகளையும் அறிமுகம் செய்திருக்கிறோம். கேரளாவில் மட்டும் விற்பனையில் இருந்த மேளம் தற்போது சென்னையில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது’’ என்றவர் சினிமாத் துறையிலும் தன் கால் தடத்தினை பதிவு செய்துள்ளார்.

‘‘நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே நாடகங்களில் நடிச்சிருக்கேன். சென்னை வந்த பிறகு இங்கு மலையாளிகளுக்கான கலை சங்கம் உள்ளது. அதில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடிச்சேன். அப்படித்தான் 2007ல் சினிமா தயாரிப்பு துறைக்கு வந்தேன். எனக்கு ஸ்ரீநாராயணன் குரு குறித்து டாக்குமென்டரி படம் எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அவரைப் பற்றி நான் எடுத்த டாக்குமென்டரி படம் மிக வேகத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்ற வரிசையில் கின்னஸ் விருதினை பெற்றது.

டாக்குமென்டரி படங்கள் மட்டுமில்லாமல், மற்ற கமர்ஷியல் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறேன். ராஜா ரவிவர்மா அவர்களைப் பற்றி தயாரித்த டாக்குமென்டரி படம் கேரளாவின் சிறந்த டாக்குமென்டரி விருதினைப் பெற்றது. மேலும் 56வது தேசிய சினிமா விருதை நான் தயாரித்த தமிழ் படமான ‘அப்புவின் நாயகன் ஸ்போட்டி’ படத்திற்கு கிடைத்தது. ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் பற்றிய முதல் படம் என்பதால் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ தமிழ் படம் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிச்சிருக்கேன். தற்போது சூப்பர் ஸ்டார் படத்தில் கமிட்டாகி இருக்கேன்’’ என்றவர் தன்னை சமூக சேவையிலும் ஈடுபடுத்தி வருகிறார்.

‘‘சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவியினை செய்ய வேண்டும். அதனை செயல்படுத்த ஒரு தொண்டு அறக்கட்டளையினை துவங்கினேன். அதில் என்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்து வருகிறேன். அதில் சுமார் எட்டு வருஷம் அரசு மருத்துவமனையில் உள்ள அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கினை செய்ேதாம். மேலும் அங்கு சிகிச்சைக்காக வரும் வசதியில்லாதவர்களுக்கு அதற்கான மருத்துவ செலவினை அறக்கட்டளை மூலம் செய்து வந்தோம். நான் எப்போதும் கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவேன்.

அதன் அடிப்படையில் எங்க ஃபேக்டரியில் வேலைப் பார்க்கும் தொழிலாளர்களின் பசங்களுக்கு படிப்பிற்கான ஊக்கத்தொகை அளிக்கிறோம். பலர் பொறியியல் மருத்துவ துறையில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு எங்க நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பினை ஏற்படுத்தியும் தருகிறோம். நல்ல விஷயத்தை முதலில் எங்களிடம் ஆரம்பிக்க நினைச்சேன். மேலும் 25 ஆண்டு காலம் எங்க நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கு எங்களால் முடிந்த உதவியினை செய்திருக்கிறோம்.

இதைத் தவிர எங்க நிறுவனத்தில் சி.எஸ்.ஆர் மூலம் தற்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ முகாம் அமைத்தோம். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகச்சைக்காக உதவி செய்து வருகிறோம், தற்போது பழங்குடியின கிராம மக்களின் நிலை மேம்பட சின்னச் சின்ன வேலைகளை செய்கிறோம். கோவை அருகே அட்டப்பாடி என்கிற ஒரு பழங்குடியினர் கிராமம் உள்ளது.

அங்குள்ளவர்கள் யாரும் அந்த ஊரைவிட்டு வெளியே வந்ததில்லை. குழந்தைகளுக்கு நல்ல தரமான பள்ளிக்கூடம் இருந்தாலும், வெளியுலகை அவர்கள் பார்த்ததில்லை என்பதால், விமானத்தில் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து இங்கு கடற்கரை எல்லாம் சுற்றி காண்பித்து மீண்டும் செல்லும் போது ரயிலில் அனுப்பி வைத்தோம். மேலும் அந்தப் பள்ளியில் உள்ள குழந்தைகளை தேர்வு செய்து அவர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வந்தோம். அதேபோல் வயநாட்டில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தினருக்கு அவர்கள் தேயிலை தோட்டம் மற்றும் தங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வண்டி ஒன்றை வாங்கிக் கொடுத்தோம்.

எங்களைப் பொறுத்தவரை இயற்கை முறையில் மனிதனுக்கு தேவையான பொருட்களை கொடுக்க வேண்டும் என்பதுதான். எங்களின் உணவுப் பொருட்கள், சோப்புகள் அனைத்தும் இயற்கை பொருட்களை கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. மேலும் சஞ்சீவனமும் இயற்கை மருத்துவம்தான். இவை அனைத்துமே ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. அதை நோக்கி தான் நான் பயணம் செய்து வருகிறேன். தற்போது சோப்பு, ஷாம்பு, ஹாண்ட்வாஷ் தயாரித்து வருகிறோம்.

இதனைத் தொடர்ந்து டூத்பேஸ்ட், தலைமுடிக்கான ேதங்காய் எண்ணை மற்றும் குழந்கைளுக்கான பராமரிப்பு பொருட்களை அறிமுகம் செய்யும் எண்ணமும் உள்ளது. அதற்கான ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றவர் தன்னுடைய அனுபவங்கள், வாழ்க்கைப் பயணம் குறித்து ‘யு டர்ன்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். மலையாள மொழியில் வெளியாகி இருக்கும் இந்த புத்தகத்தை தமிழிலும் அச்சிட உள்ளதாக தெரிவித்தார்.

தொகுப்பு: ப்ரியா

The post இயற்கை முறையில் மனிதனுக்கான பொருட்களை கொடுக்க வேண்டும்! appeared first on Dinakaran.

Tags : Kungumum Doshi ,AV ,AVA Group ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் பகுதியில் நடந்து வரும்...