×

அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுக்கிறது : உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் பரபரப்பு கருத்து!!!

டெல்லி : லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய அமலாக்கத்துறை தொடர்ந்த மனு மீது 2 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த டிசம்பர் 1ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அங்கித் திவாரி வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் விஸ்வநாதன், சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை தங்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அளிக்கவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்தது. தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், “உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது அமலாக்கத்துறை எந்த விசாரணையும் நடத்தாதது ஏன்?.அசாம் முதலமைச்சர் மீது FIR உள்ள நிலையில், அந்த வழக்கை ED விசாரித்ததா? தமிழ்நாட்டை மட்டும் அமலாக்கத்துறை குறிவைப்பது ஏன்?.பணமோசடி என்பதே குற்றமாகும், அது குற்றத்தின் விளைவு அல்ல. எனவே பணமோசடி இல்லாமல் ஒரு வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு எப்படி உரிமை உள்ளது?எந்த குற்ற வழக்கின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மணல் குவாரி வழக்குகளை ED விசாரிக்கிறது?. மணல் கொள்ளை தொடர்பாக வேறு எந்த மாநிலத்திலாவது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருக்கிறதா?

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விஸ்வநாதன், “பழிவாங்கும் போக்குடன் அமலாக்கத்துறை செயல்படுவதை தடுக்க புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும். பழி வாங்குதல் என்ற புகார் எழாத வகையில் நடவடிக்கை எப்படி தொடங்க வேண்டும் என்று நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுக்கிறது. உண்மையான வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதே வேளையில், அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் எடுக்கும் சில வழக்குகளில் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்று கூறினார்.

மேலும் அவர், அங்கித் திவாரி கைது தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை அளித்த கோரிக்கையை நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து, அங்கித் திவாரி கைது பற்றிய ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய அமலாக்கத்துறை தொடர்ந்து மனு மீது 2 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுக்கிறது : உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் பரபரப்பு கருத்து!!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Justice ,Viswanathan ,Delhi ,Supreme Court of Tamil Nadu ,Tamil Nadu ,Enforcement Department ,Ankit Tiwari ,CBI ,Dindigul Government ,Doctor ,Sureshbabwa ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...