×

‘நாடாளுமன்றத் தேர்தலில் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி’ கோயில் கட்டியதால் ஒரு கட்சி தேர்தலில் ஜெயித்துவிட முடியாது: மோடி மீது எடப்பாடி பழனிசாமி மறைமுக தாக்கு

சேலம்: ‘நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து சூழலுக்கு ஏற்றவாறு முடிவுசெய்வோம். கோயில் கட்டியதால் ஒரு கட்சி தேர்தலில் ஜெயித்துவிடும் என்பதை ஏற்க முடியாது’ என்று மோடி மீது எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக விமர்சித்து உள்ளார்.

சேலம் இடைப்பாடியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. நிச்சயம் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை முதல் பணிகளை துவங்குகிறது.
ராமர் கோயில் கட்டியது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூற முடியாது. ஒரு கோயிலை கட்டிவிட்டால் அந்த கட்சி ஜெயித்து விடும். அந்த கட்சிக்குத்தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்பதையும் ஏற்க முடியாது.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே, ராமர் கோயிலை வைத்து தேர்தல் வாக்கை கணக்கிட முடியாது. அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்காலத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டது. பல கோயில்களுக்கு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. தேவாலயங்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அந்தந்த மதத்தினர் கோயில், தேவாலயங்கள், மசூதிகள் கட்டுகிறார்கள், வழிபடுகிறார்கள். அது அவரவர் விருப்பத்தை சார்ந்தது. அதற்காக ஒரு கோயில் கட்டினால் அவர் (மோடி) பின்னாடி செல்வார்கள் என்று கூற முடியாது. இதை தேர்தலோடு இணைத்து பார்க்கக்கூடாது. அதிமுக ேதர்தல் அறிக்கையில் என்னென்ன இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது. மாநில உரிமையை மீட்பதில் எங்கள் நிலைப்பாடு குறித்து தேர்தல் அறிக்கையில் தெரியவரும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

The post ‘நாடாளுமன்றத் தேர்தலில் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி’ கோயில் கட்டியதால் ஒரு கட்சி தேர்தலில் ஜெயித்துவிட முடியாது: மோடி மீது எடப்பாடி பழனிசாமி மறைமுக தாக்கு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Modi ,SALEM ,PARLIAMENTARY ELECTION ,Adappadi Palanisami ,Salem Hemisphere ,Coalition ,
× RELATED கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன்...