×
Saravana Stores

பெண்ணை கொன்று நகைகளை திருடியவருக்கு ஆயுள் தேனி கோர்ட் தீர்ப்பு

தேனி, ஜன. 25: பெண்ணை கொலை செய்து நகைகளை திருடியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட் தீர்ப்பளித்தது. தேனி மாவட்டம், தேவாரத்தில் உள்ள அமராவதி நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சரணமணி(40). இதே ஊரைச் சேர்ந்தவர் அழகர் மகன் சடையாண்டி(42). சடையாண்டிக்கு சரணமணி ரூ.40 ஆயிரம் கடனாக வழங்கினார். கடன்பணத்தை திரும்ப கேட்டபோது, ஆத்திரமடைந்த சடையாண்டி கடந்த 2018ம் ஆண்டு ஆக.3ம் தேதி சரணமணியை தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தார்.

மேலும், வீட்டில் இருந்த சுமார் 69.450 கிராம் தங்க நகையை திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரில் தேவாரம் போலீசார் சடையாண்டியை கொலை மற்றும் நகை திருட்டு சம்பந்தமான பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல்.சுகுமாறன் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நேற்று நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில், குற்றவாளியான சடையாண்டிக்கு 302 பிரிவின் கீழான கொலைக்குற்றத்திற்காக ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், திருட்டு குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்தும், சிறைத்தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்தத்தவறினால் கூடுதலாக 2 மாத காலம் மெய்க்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

The post பெண்ணை கொன்று நகைகளை திருடியவருக்கு ஆயுள் தேனி கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : LIFE HONEY COURT ,Theni ,Teni Court ,Tangavel ,Saranamani ,Amravati ,Dewar ,Sadaiandi ,
× RELATED தேனி மாவட்டத்தில் தொடர் மழையால்...