×

இந்தியா மத சார்புள்ள நாடு என ஆளுநர் பேசி வருகிறார்; காந்தியை கொச்சைப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது: சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை:நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு அணையிலிருந்து பிசான பருவ நெல் சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு நேற்று தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தார். வெள்ளையர் ஆட்சி நடந்த போது விடுதலை போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன். பிரிட்டிஷ் ஆட்சியின் சாதனைகளை இந்தியா முழுவதும் பறைசாற்றுவேன் என்று அவர் மூன்று முறை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளியில் வந்தவர். அவரை ஏற்றுக் கொண்டது தான் ஆர்எஸ்எஸ் இயக்கம்.

தேசப்பிதா காந்தியை படுகொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் 11 பேரும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் உள்ளவர்கள். காந்தியை பொருத்தமட்டில் மிகப் பெரிய தேச பக்தர் என்று சொல்வதை விட மிகப் பெரிய ராம பக்தர். அப்படிப்பட்ட ராம பக்தனை சுட்டுக் கொன்றார்கள். மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியான பிரக்யா சிங்கிற்கு முன் விடுதலை கொடுக்கப்பட்டு பாஜ சார்பில் மத்திய பிரதேசத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட செய்து வெற்றி பெற்றார்.

இந்தியா மத சார்பற்ற நாடு என உள்ளது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி பொதுவெளியில் மத சார்புள்ள நாடு என்று பேசுகிறார் என்றால் இந்திய அரசியலைப்பு சட்டத்தை எப்படி மதிக்கிறார் என்று பாருங்கள். ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்போதும் மதிப்பதில்லை. இந்தியாவே ஏற்றுக் கொண்டுள்ள காந்தியடிகளை, தேசத்திற்காக சுதந்திரம் பெற்றுத் தந்தவரை கொச்சப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியலமைப்பு சட்டப்படி ஆர்.என்.ரவி செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பல மாநிலங்களில் ஆய்வு செய்த பின்தான் நேரலை செய்யப்படுகிறது
சபாநாயகர் கூறுகையில், ‘நான் சபாநாயகராக வந்த பிறகு சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில் என்னென்ன வகையில் நேரடியாக ஒளிபரப்பலாம் என பல மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்து தற்போது நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்தார்.

The post இந்தியா மத சார்புள்ள நாடு என ஆளுநர் பேசி வருகிறார்; காந்தியை கொச்சைப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது: சபாநாயகர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,India ,Gandhi ,Speaker ,Appavu ,Nellai ,Nambiaru dam ,Nellai district ,Savarkar ,Andaman Jail ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து