×

செம்பிலும் கலைவண்ணம் காணலாம்!

நன்றி குங்குமம் தோழி

‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப கல்லில் மட்டும் தான் கலைகளை வடிவமாக்க முடியுமா..? செம்பு தகட்டிலும் அழகான கலைகளை வண்ணமயமாக்க முடியும் என்கிறார் சென்னை மாம்பலத்தை சேர்ந்த ஓவியர் மற்றும் சிற்பியான ஹேமலதா. இவர் சென்னையில் பெசன்ட் நகரில் உள்ள தியோசோபிகல் சொசைட்டியில் தன்னுடைய ஓவியங்கள் மற்றும் செம்பு சிற்பங்களை இம்மாதம் இறுதிவரை காட்சிக்காக வைத்துள்ளார். தன் கைகளால் செம்புக் கம்பிகளை இணைத்து அழகான சிற்பங்களை வடிவமைத்து இருந்தவரை அவரின் கண்காட்சியில் சந்தித்தோம்.

‘‘என்னுடைய அப்பாவும் ஓவியர் மற்றும் சிற்பிக் கலைஞரான சேனாதிபதி. அவர் சென்னை இ.சி.ஆரில் அமைந்துள்ள சோழமண்டல கலை கிராமத்தின் ஓவியர். அவரின் ஆரம்ப காலத்தில் 80களில் ஓவியங்கள் மேல் மக்களுக்கு பெரிய அளவில் ஈடுபாடு இருந்தது இல்லை. அப்பா ஓவியம் வரைந்தாலும், அவர் சின்னச் சின்ன கைவினைப் பொருட்களையும் வடிவமைப்பார். அதைத்தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்வார்கள்.

குறிப்பா கடவுள் சிலைகளை அப்பா செம்புத் தகட்டில் எம்ேபாசிங் முறையில் செய்வார். அதை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அதனால் எனக்கு அதன் மேல் தனிப் பட்ட ஆர்வம் ஏற்பட ஆரம்பிச்சது. நானும் அப்பாவை போல் உளியை எடுத்து அவர் வேண்டாம் என்று தூக்கி எறிந்த செம்பு தகட்டில் மனசுக்கு தோன்றும் வடிவங்களை செதுக்குவேன். அதில் கழுத்தில் மாட்டிக் கொள்ளக்கூடிய சின்னச் சின்ன டாலர்களை வடிவமைச்சேன். அப்படித்தான் எனக்கும் இந்த கலைக்குமான தொடர்பு ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சின்னச் சின்ன பொருட்களில் இருந்து பெரிய அளவிலான கிருஷ்ணர், பிள்ளையார், அனுமன் போன்ற படங்களை நான் எம்போஸ் செய்ய ஆரம்பித்தேன். அதை அப்பாவின் கேலரியில் வைத்தேன்.

சோழமண்டலம் என்பது எங்களைப் போன்ற கலைஞர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கிராமம். அரசு நுண்கலை கல்லூரியின் தலைமை ஆசிரியராக பனிக்கர் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் தன் கல்லூரி மாணவர்கள் 38 பேரை இணைத்து, அவர்களின் படைப்புகளுக்காகவே ஒரு கிராமம் ஒன்றை அமைக்க விரும்பினார். அதில் அவர்களின் படைப்புகள் அனைத்தும் காட்சிக்காக வைக்கப்படும். விரும்புபவர்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்ற முறையில்தான் சோழமண்டலம் உருவானது. அந்த 38 மாணவர்களில் அப்பாவும் ஒருவர் என்பதால், நாங்க அந்த கிராமம் முழுமையாக அமைந்த பிறகு அங்கு செட்டிலாயிட்டோம்.

அங்கு எங்களுக்கு என தனிப்பட்ட கேலரியை வீட்டுடன் அமைத்திருக்கிறோம். ஆரம்பத்தில் நாங்க சென்னையில் தான் இருந்தோம், அங்குதான் பள்ளிப் படிப்பினை முடிச்சேன். அதன் பிறகு அங்கு அப்பா வீடு மற்றும் கேலரி அமைத்தவுடன் நாங்க எல்லோரும் அங்கு சென்றுவிட்டோம். அங்கு பல கலைஞர்களின் படைப்புகளுக்கு மத்தியில்தான் நான் வளர்ந்தேன். அப்பாவை பார்த்து நான் செம்பு எம்போசிங் கற்றுக் கொண்டாலும், அங்குள்ள பலரின் ஆலோசனைகளும் எனக்கு பெரிய அளவில் சப்போர்ட்டாக இருந்தது.

இதற்காக நான் தனிப்பட்ட முறையில் பயிற்சி எல்லாம் எடுத்துக்கல. கண் பார்த்து கை செய்வதுன்னு சொல்வாங்க. அப்படித்தான் நான் கற்றுக்கொண்டேன். நான் செய்த படைப்புகளை அப்பாவிடம் காண்பிப்பேன். அவர் சில திருத்தங்கள் சொல்வார். செம்பு எம்போசிங் மட்டுமில்லாமல், ஓவியங்களும் வரைய ஆரம்பித்தேன். அதை அங்கு நடைபெறும் கண்காட்சியில் வைப்பேன். சில சமயம் அப்பாவைப் பார்க்க கெஸ்ட் வருவாங்க. அவங்களை அப்படியே நான் வரைவேன்’’ என்றவர் கலையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக தன்னை தயார்படுத்த ஆரம்பித்துள்ளார். ‘‘எந்த ஒரு கலைஞருக்கும் தான் கற்றுக் கொண்ட கலையின் அடுத்தகட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

நானும் என்னுடைய சிற்பக் கலையில் இம்பிரவைஸ் செய்ய விரும்பினேன். அதில் ஆரம்பிக்கப்பட்டதுதான் செம்பில் நான் வடிவமைத்து வரும் சிற்பங்கள். செம்பில் எம்போசிங் செய்வதை அழகான சிற்பங்களாக வடிவமைத்தால் என்ன என்று தோன்றியது. அதை எப்படி செய்யணும்னு நானே எனக்குள் அவுட்லைனை ஏற்படுத்தினேன். முதலில் நான் செதுக்க போகும் சிற்பத்தை அப்படியே ஒரு காகிதத்தில் வரைந்தேன். அதன் பிறகு அதனை செம்பு தகட்டில் செதுக்கினேன்.

ஒரே ஓவியம் என்றால் அதற்கு ஒரு செம்பு தகடு மட்டும் போதும். ஆனால் சிலைகள் போல் வடிவமைக்கும் போது, அதன் தலை, கை, உடம்பு, கால் என தனித்தனியாக வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் தனியாக வரைந்து அதை தனித்தனியாக கத்தரித்து செதுக்கி வைத்துக் கொள்வேன். அதன் பிறகு ஒரு ஸ்டீல் கம்பி கொண்டு அனைத்தையும் ஒன்றாக இணைத்து வெல்டிங் செய்ய வேண்டும்.

செம்பு தகட்டினை கத்தரிக்கும் போது கை வலிக்கும் என்பதால், கிளவுஸ் எல்லாம் அணிந்துதான் கத்தரிக்க வேண்டும். அதேபோல் வெல்டிங் செய்யும் போதும், மிகவும் கவனமாக செய்ய வேண்டும். நானே பிடித்துக் கொண்டு வெல்டிங் செய்ய முடியாது என்பதால், அதை மட்டும் நான் வெல்டரிடம் கொடுத்த செய்து கொள்வேன். அதன் பிறகு இதன் மேல் எனாமல் கொண்டு வண்ணம் தீட்டுவேன். சிற்பமாக வடிவமைக்கும் போது, செம்பு தகடு மட்டுமே பயன்படுத்த முடியாது.

சிற்பங்களின் அமைப்பிற்கு ஏற்ப செம்பு கம்பிகளையும் ஆங்காங்கே வளைத்து பயன்படுத்தினால் தான் சிற்பத்திற்கு முழுமையான வடிவம் கொடுக்க முடியும். நான் செம்பு பயன்படுத்த காரணம் இது எளிதாக வளையக்கூடியது. அதனால் நாம் விரும்பும் உருவங்களை அமைக்க முடியும். பார்க்கவும் வசீகரமாக இருக்கும், பராமரிப்பதும் எளிது’’ என்றவருக்கு அவர் வடிவமைத்த மயில் செம்பு சிற்பத்திற்கு 1991ல் லலித்கலா அகாடமியின் தமிழ்நாடு மாநில விருது கிடைத்துள்ளது.

‘‘சிற்பம் ஒரு பக்கம் இருக்க செம்பு தகட்டால் எம்போசிங் செய்வதும் கொஞ்சம் கடினமான வேலைதான். முதலில் இதற்கான ஒரு அரக்கு படுக்கையை தயாரித்து வைத்துக் கொள்ளணும். அதை சூடு செய்து அதன் பிறகு அதன் மேல் செம்பு தகட்டினை வைத்து எங்கெல்லாம் எம்ேபாசிங் செய்ய வேண்டுமோ அந்தப் பகுதியினை அழுத்தி அதற்கு ஏற்ப தகட்டினை வடிவமைக்க வேண்டும். அரக்கு உருகும் போது தான் முகம், மார்பகம், கை, கழுத்து போன்ற பகுதிகள் எம்போசிங் செய்ய எளிதாக இருக்கும். மீண்டும் அரக்கு இறுகி தகட்டில் நாம் நினைத்த உருவத்திற்கான வடிவம் வந்தவுடன் அரக்கினை சுத்தம் செய்து, அதில் கண், மூக்கு, கை என அவுட்லைன் வரையணும். அப்போது தான் அது ஒரு வடிவமாக மாறும்.

இல்லை என்றால் செம்பு தகட்டில் ஆங்காங்கே மேடாக இருப்பது போல் தான் காட்சியளிக்கும். கடைசியில் எங்கெல்லாம் எனாமல் கொண்டு பெயின்ட் அடிக்க வேண்டுமோ அடிக்கலாம். தேவைப்பட்டால், காப்பர் அல்லது சில்வர் பாலீஷ் கொடுக்கலாம். பார்க்க அழகாக இருக்கும். நான் பெரும்பாலும் நாம் அன்றாடம் வாழ்க்கையில் பார்க்க கூடியவற்றைதான் எம்போசிங், ஓவியம் மற்றும் சிற்பங்களாக வடிவமைக்கிறேன். இதில் மயில், பழங்குடியினர், ஆந்தை, கிருஷ்ணர், அனுமன், பிள்ளையார் போன்ற கடவுள் உருவங்கள் மற்றும் மனித உருவங்களை வடிவமைக்கிறேன். பல கலைஞர்களுடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட கண்காட்சியில் இடம் பெற்று இருக்கேன். அதைத் தவிர தனிப்பட்ட முறையிலும் கண்காட்சி அமைத்து வருகிறேன்.

தற்போது, இந்தியா முழுக்க என்னுடைய கலைப் பொருட்களின் கண்காட்சி நடத்தி இருக்கிறேன். வெளிநாட்டிற்கும் நம்முடைய கலாச்சார கலைப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். மேலும் பல கண்காட்சிகளை அமைத்து இந்த கலை குறித்து தெரியப்படுத்த வேண்டும்’’ என்றவர் 2019ல் மீண்டும் தன்னுடைய படைப்பிற்காக தமிழ்நாடு மாநில விருதினை பெற்றுள்ளார் சிற்பி ஹேமலதா.

தொகுப்பு: ஷம்ரிதி

The post செம்பிலும் கலைவண்ணம் காணலாம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Dothi ,Hemalatha ,Mambalam, Chennai ,
× RELATED சைகை மொழி