×

இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் எம்.பி.ஏ பட்டதாரி!

நன்றி குங்குமம் தோழி

இயற்கை விவசாயம் என்று பேசுபவர்கள் மத்தியில், தன் தந்தையின் ஐம்பது ஏக்கர் நிலத்தில், இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து குறுகிய காலத்தில் அதில் விளையும் பொருட்களை விற்பனை செய்வதற்காகவே நான்கு கடைகளை உருவாக்கி, மக்களிடையே நல்ல மதிப்பை பெற்றுள்ளார் புதுச்சேரியை சேர்ந்த மித்ரா. இவர் விவசாயத்தின் மேல் தனக்கு ஏற்பட்ட ஈடுபாடு மற்றும் இயற்கை அங்காடிகள் திறந்த காரணத்தைப் பற்றி விவரித்தார்.

‘‘புதுச்சேரி, பி.எஸ்.பாளையம் கிராமம் தான் என்னுடைய பூர்வீகம். எம்.பி.ஏ பட்டதாரி. படித்து முடிச்சதும், வீட்டில் கல்யாணம் பேசிட்டாங்க. கிராமம் என்றாலே பெண்களை வெளியே போகக்கூடாது என சொல்பவர்கள் மத்தியில் எனது கணவரின் குடும்பம் வேலைக்குச் செல்ல எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. நான் படிச்ச படிப்பு வீணாகக்கூடாது என்று என்னை வேலைக்கு செல்ல தடை செய்யவில்லை. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன்.

என்னுடைய பூர்வீகம் கிராமம் என்பதால், அப்பாவிற்கு சில ஏக்கர் நிலம் இருந்தது. அவர் அதில் விவசாயம் செய்து வந்தார். நாங்க சென்னையில் இருந்ததால், விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு செல்வது வழக்கம். ஒரு முறை நானும் என் தங்கை குடும்பம் என இருவரும் அப்பா வீட்டிற்கு வந்திருந்தோம். அப்போது அப்பா விவசாயத்திலும், விளைந்த பொருட்களை விற்பதிலும் சில இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. அது அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்ததால் என்ன செய்தால் இதிலி ருந்து மீள முடியும் என அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு முதலில் அதில் ஈடுபாடு இல்லை. அந்த நேரத்தில்தான் எங்க கிராமத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு விவசாயத்தில் என்னெல்லாம் செய்யலாம் என்பது குறித்து பேசுவாங்க. அப்பாவுடன் நானும் உடன் சென்றேன். அங்கு போன பிறகு தான், ஏன் நிலங்களை விற்கணும்… அதை பராமரித்தால் என்ன என்று எண்ணம் வந்தது’’ என்றவர் விவசாயத்தை எவ்வாறு பிஸினசாக மாற்றி அமைத்து அதில் வெற்றிக் கண்டுள்ளார் என்பது குறித்து விவரித்தார்.

‘‘விவசாயம் பற்றி எதுவுமே தெரியாமல்தான் அந்த குழு மீட்டிங்கில் நான் கலந்து கொண்டேன். அந்தக் குழுவில் இருந்த 11 விவசாயிகளுமே இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்கள். அவர்களுக்கு முன்மாதிரி எங்களுடைய தந்தை எனவும், அவரால் தான் இயற்கை விவசாயத்தை தேர்ந்தெடுத்ததாகவும் குறிப்பிட்டனர். அதை கேட்கும் போது எனக்குமே விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதில் நான் அவர்களின் நிலத்தில் விளையும் பொருட்களை எவ்வாறு விற்பனை செய்யலாம்னு ஆலோசனை கொடுத்தேன். முதலில் நான் சொன்னதை கேட்டு சிரிச்சாங்க.

இந்த கால இளைஞர்கள் முதலில் விவசாயத்தில் ஈடுபடுவாங்களா? அப்படியே செய்தாலும், அதில் விளையும் பொருட்களை கடைகடையா எப்படி விற்பனை செய்வாங்கன்னு கேட்டார்கள். முடியும் என்று நினைத்தால் எதையும் செய்ய முடியும்னு நான் சொன்ன போது, அவர்கள் யோசிக்காமல், தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை என்னிடம் கொடுத்து, அதை விற்றுக் கொடுக்கும்படி சொன்னாங்க. எனக்கும் அது நல்ல யோசனையா பட்டது.

உடனே அந்தப் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, சென்னைக்கு கிளம்பினேன். சென்னையில் ஆர்கானிக் பொருட்களை வாங்குபவர்கள் மற்றும் எனக்கு தெரிந்தவர்களிடம் விற்பனை செய்தேன். ஒவ்வொரு வார இறுதி நாட்களில் விவசாயப் பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். 2015ல் வார விடுமுறை திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வியாபாரம் இப்போது நான்கு கடைகளை நிர்வகிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது’’ என்றவர் ‘மா இலை’ அங்காடிப் பற்றி விவரித்தார்.

‘‘கிருஷ்ணா என்பது எங்களின் பண்ணையின் பெயர். சொல்லப்போனால் எங்கள் குடும்பத் தொழில் அனைத்துமே அந்தப் பெயரில்தான் இயங்குகிறது. 2018ல் நான் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்துவிட்டாலும், இரண்டு வருஷம் கழிச்சு தான் அங்காடியை ஆரம்பிச்சேன். முதலில் ‘கிருஷ்ணா இயற்கை அங்காடி’என்ற பெயரில்தான் துவங்கினோம். இங்கு இயற்கை விவசாயப் பொருட்கள் மட்டுமில்லாமல் அதில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களையும் விற்பனை செய்ய துவங்கினோம்.

எங்க நிலத்தில் உள்ள பொருட்கள் மட்டுமில்லாமல் மற்ற விவசாயிகளிடம் இருந்து பெற்ற பொருட்களில் இருந்து பிஸ்கெட், இனிப்பு, கார வகைகள், சத்து மாவு என பல உணவுப் பொருட்களை நாங்களே தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஏற்கனவே கிருஷ்ணா பெயரில் இயங்கி வருவதால் மற்ற பொருட்களில் இருந்து எங்களுடைய தயாரிப்பு தனித்து தெரிய வேண்டும் என்று எண்ணியதால் கிருஷ்ணாவிலிருந்து ‘மா இலை’ என பெயர் மாற்றினோம்.

மா இலை சுத்தத்தை பிரதிபலிப்பது. எங்களுடைய பொருட்களும் சுத்தமாகவும் இயற்கையான முறையில் தரமாக தயாரிக்கப்படுகிறது என்பதால் இந்தப் பெயரை வைத்தோம். ஆனால் நான் கடையை ஆரம்பிக்கும் முன் வீட்டில் விவசாயம் செய்யப் போகிறேன்னு சொன்ன போது, வீட்டில் நல்ல வேலையை விட்டு விட்டு ஏன் விவசாயம்னு கேள்வி கேட்டாங்க. விவசாயம் பார்த்து வந்த அப்பாவே முதலில் மறுத்தார்.

நான் வேலை பார்த்தால் என் குடும்பத்திற்கு மட்டும்தான் உதவியா இருக்கும். இதுவே விவசாயம் என்றால், என்னால் பல குடும்பங்களுக்கு உதவ முடியும் என்று சொல்லிதான் நான் இந்த தொழிலை கையில் எடுத்தேன். தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களும் எங்க கடையில் ஆர்டர் மூலம் பொருட்களை வாங்கி செல்கிறார்கள்’’ என்றவர் பிஸினசில் அவர் சந்தித்த பிரச்னைகள் பற்றியும் குறிப்பிட்டார்.

‘‘விவசாயம்தான் செய்யப் போறேன்னு முழுசா இறங்கிட்டேன். முதலில் பூக்களை தான் விதைச்சேன். அதாவது, வாரம் மற்றும் மாத வருமானம் தரக்கூடிய பூக்கள், காய்கறிகளை பயிர் செய்தேன். அப்பதான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பூக்களை விற்க முடியாமல், கீழே கொட்டினோம். இந்த நேரத்தில் தனியாக கடை அமைக்க முடியாது என்பதால், என் வீட்டின் கார் பார்க்கிங்கில் சிறிய அளவில் என் முதல் கடையினை துவங்கினேன்.

ஆனால் எனக்கு தனிப்பட்ட இடத்தில் கடையினை துவங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்கு முன் தொழிலில் ஏற்படக்கூடிய நஷ்டம் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். எங்களை போல் இயங்கும் இயற்கை அங்காடிகளுக்கு நேரடியாக சென்று அங்கு அவர்கள் வியாபாரத்தில் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுதான் கடையை துவங்கினேன். அதன் பிறகு கிராமத்தில் ஒரு கடையை ஆரம்பிச்சோம். அங்குதான் இனிப்பு மற்றும் கார வகை உணவுகள் தயாராகி மற்ற கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படும். மக்களின் ஆதரவினால் தற்போது எங்களின் நான்கு கடைகளும் நல்ல முறையில் இயங்கி வருகிறது’’ என்றவர் தன் நிலத்தில் இயற்கை விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

‘‘எங்க கடையில் விற்கப்படும் பொருட்களின் தரத்தில் எந்த காம்பிரமைஸும் நாங்க செய்துகொள்வதில்லை. காரணம், இவை அனைத்துமே இயற்கை முறையில் விளைவிக்கப்
படுகிறது. அதில் உற்பத்தியாகும் பயிர்களை கொண்டுதான் நான் மற்ற மதிப்புக்கூட்டும் பொருட்களை தயாரிக்கிறேன். அதனை முழுக்கமுழுக்க எங்க அம்மா லதா ரவிச் சந்திரன்தான் பார்த்துக்குறாங்க. மேலும் அருகில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆர்டரின் பேரில் மதிய நேரம் சிறுதானிய உணவினை வழங்கி வருகிறோம்.

சொல்லப்போனால் எங்க பண்ணையில் இருப்பது அனைத்தும் நாட்டு மாடுகள்தான். நாட்டு மாட்டின் பாலின் விலை மற்ற பாக்கெட் பாலைவிட அதிகம். அதற்கு காரணம் அதன் உணவில் மற்றும் பராமரிப்பில் நாங்க தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறோம். பண்ணையில் இருந்து கொண்டு வரப்படும் பால்களுக்கான போக்குவரத்து என அனைத்தையும் கணக்கில் ெகாண்டுதான் பாலின் விலையினை நாங்க நிர்ணயிக்கிறோம். தற்ேபாது விவசாயிகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கேன்.

விவசாயிகளை ஒன்றிணைப்பதற்காக அமைக்கப்பட்ட நிறுவனம். மகாராஷ்டிராவில் இதே போல் விவசாயிகளுக்காக நிறுவனம் இயங்கி வருகிறது. அதன் மூலம் விவசாயிகள் பலன்களை அடைந்து வருகிறார்கள். அதை மனதில் கொண்டு தான் சுவாசம் குளோபல் விவசாயிகள் என்ற பெயரில் 2016-ல் அப்பா மற்றும் பிற விவசாய நிறுவனர்களுடன் இணைந்து துவங்கினேன். இதில் தற்போது 55 விவசாயிகள் இணைந்துள்ளனர். மேலும் அவர்கள் நிலத்தில் உற்பத்தியாகும் பொருட்களை அப்படியே விற்காமல், உணவுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருகிறோம்.

அதிக அளவில் விவசாயிகள் இந்த நிறுவனத்தில் இணையும் போது, அரசுத் தரப்பில் இருந்து பல நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும். தற்போது எங்க நிறுவனத்தில் 55 விவசாயிகள் இணைந்துள்ளனர். விவசாயம் இயற்கை முறையில் செய்வதால், நாங்க தயாரிக்கும் உணவுப் பொருட்களையும் மரத்திலான பெட்டிகளில்தான் விற்பனை செய்கிறோம். இதற்கு பக்க பலமாகவும் பண ரீதியாகவும் உதவியாக இருப்பது எனது சகோதரி காதம்பரிதான். மேலும் இயற்கை விவசாயம் நம்முடைய பாரம்பரியம். நாம்தான் அதை மீட்டெடுக்க வேண்டும்’’ என்ற மித்ரா 2022க்கான வாஸ்கோ விருதினை பெற்றுள்ளார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் எம்.பி.ஏ பட்டதாரி! appeared first on Dinakaran.

Tags : Kungum Dodhi ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...