×

சின்னசேலத்தில் சிறுபாலம் கட்டும் பணி வாகனங்கள் பஸ்நிலையத்தில் நுழைந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல்

*மாற்று வழியில் திருப்பிவிட கோரிக்கை

சின்னசேலம் : சின்னசேலம் பஸ்நிலையம் அருகில் பழைய ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக காந்தி நகர் உட்பட பெத்தானூர், ராயர்பாளையம், ஈசாந்தை, உலகியநல்லூர், தென்செருவள்ளூர் போன்ற கிராமங்களுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சாலையில் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட கார், பைக், மினிவேன் போன்ற வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் மெயின்ரோட்டின் அருகில் இந்த சாலைக்கு செல்லும் வளைவிலேயே சாக்கடை கால்வாய் சிறுபாலம் இருந்தது. இந்த சாக்கடை கால்வாய் பாலம் பழுதடைந்து இருந்ததால் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் சிறுபாலம் கட்டும் பணி துவங்கியது.

இந்த சாக்கடை கால்வாய் பாலம் கட்டும் பணி துவங்கி உள்ளதால் இந்த சாலையில் பைக், கார், மினிவேன் போன்ற வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்ல வேண்டிய கார், பைக், மினிவேன் போன்ற வாகனங்கள் பஸ் நிலையத்தில் நுழைந்து செல்கிறது. சின்னசேலம் பஸ்நிலையம் ஏற்கனவே 3 பேருந்துகள்கூட நிற்க வழியில்லாமல் மிகவும் குறுகலாக உள்ளது.

அதுவும் காலை, மாலை நேரம் என்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டத்தால் மிகுந்த நெரிசல் இருக்கும். பேருந்துகள் உள்ளே வரவும், வெளியேறவும் மிகுந்த சிரமமாக இருக்கும். இந்த நிலையில் சிறுபாலம் கட்டும் சாலையில் போக்குவரத்து தடைபட்டதால் கார், பைக், போன்ற வாகனங்கள் பேருந்துகள் வெளியேறும் திசையில் பஸ்நிலையத்திற்குள் நுழைந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால் பேரூராட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து காந்தி நகர் பகுதிக்கு செல்லும் கார், பைக், மினிவேன் போன்ற வாகனங்களை பஸ்நிலையத்திற்குள் நுழையாமல் மாற்று வழியில் திருப்பிவிட வேண்டும். அதாவது காவல் நிலையம் எதிரில் சமன்படுத்தி வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை வளாகம் வழியாக பைக் போன்ற வாகனங்களை திருப்பிவிட வேண்டும். இதை பாலம் கட்டும் வரை பஸ்நிலையத்திற்குள் நுழையாமல், இந்த வழியாக திருப்பி விட வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள், பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post சின்னசேலத்தில் சிறுபாலம் கட்டும் பணி வாகனங்கள் பஸ்நிலையத்தில் நுழைந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Primary Health Centre ,Gandhi Nagar ,Bethanoor ,Rayarpalayam ,Isanthai ,Ulaganiyanallur ,Thenseruvallur ,Dinakaran ,
× RELATED கர்ப்ப காலத்தில் உடல் மன ஆரோக்கியம்...