×

வேலூர் மண்டலத்தில் உள்ள 22 நகராட்சிகளில் ₹61.47 கோடி சொத்து வரி பாக்கி உள்ளது

*மண்டல நிர்வாக இயக்குனர் தகவல்

அரக்கோணம் : வேலூர் மண்டலத்தில் உள்ள 22 நகராட்சிகளில் ரூ.61.47 கோடி சொத்து வரி பாக்கி உள்ளது என மண்டல நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். அரக்கோணம் நகராட்சியில் ரூ.6.82 கோடி மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் கடைகள் கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்பணிகளை, வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் தனலட்சுமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இப்பணியினை விரைந்து முடித்து வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு கடைகளை கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர், அரக்கோணம் ஹவுசிங் போர்டு பகுதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள புத்தகங்களை பார்த்து வியப்படைந்தார். மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களுக்கு வந்து இங்குள்ள புத்தகங்களை படித்து பல்வேறு போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ரகுராமன், பொறியாளர் செல்வகுமார், சுகாதார அலுவலர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் தனலட்சுமி கூறுகையில், ‘வேலூர் மண்டலத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளது. மொத்தம் 22 நகராட்சிகள் உள்ளது. இங்கு, 100 சதவிகிதம் வரி வசூல் செய்யும் பணிகளில் ஆணையாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வரி வசூலிப்பவர்கள் முழு வீச்சில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, நகராட்சி பகுதிகளில் வரி செலுத்துபவர்கள் உடனடியாக பல்வகையான வரிகளை செலுத்தி வளர்ச்சிப் பணிகளுக்கு உதவ வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுமக்கள் வசதிகளுக்காக வரி செலுத்தும் மையங்கள் நகராட்சி அலுவலகங்களில் திறந்து வைத்திருக்கப்படும்.

எனவே, இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும்,வேலூர் மண்டலத்தில் உள்ள 22 நகராட்சிகளில் மொத்த சொத்து வரி மட்டும் ரூ.61.47 கோடி வசூலாக வேண்டி உள்ளது. இதனை உடனடியாக வசூல் செய்ய அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறினார்.

The post வேலூர் மண்டலத்தில் உள்ள 22 நகராட்சிகளில் ₹61.47 கோடி சொத்து வரி பாக்கி உள்ளது appeared first on Dinakaran.

Tags : Vellore ,Zonal ,Executive Director ,Arakkonam ,Dinakaran ,
× RELATED குறிப்பிட்ட நேரத்தில் கண்காணித்து...