×

பாமக கவுன்சிலர் மீது அலுவலர் புகார் லஞ்சம் கேட்பதாக கவுன்சிலரும் புகார்

*கடலூர் மாநகராட்சியில் பரபரப்பு

கடலூர் : கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் வருவாய் உதவியாளர் உஷா, மாநகர ஆணையாளருக்கு புகார் அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:கடலூர் மாநகர 24வது வார்டு கவுன்சிலர் சரவணன், நாங்கள் பணி மேற்கொள்ளும் போது பல்வேறு வகையில் இடையூறு ஏற்படுத்தி வருகிறார். இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. அதே பகுதியில் உள்ள வீட்டில் வரி கட்ட வேண்டும் என தெரிவித்தபோது, வீட்டு உரிமையாளர் மறுத்து விட்டார்.

இதன் காரணமாக அதிகாரிகள் முன்னிலையில் அந்த வீட்டிற்கு செல்லக்கூடிய குடிநீர் இணைப்புபை துண்டிக்கப்பட்டது. இது தொடாபாக கவுன்சிலர் சரவணன் செல்போனில் தொடர்பு கொண்டு மரியாதை குறைவாக பேசினார். மாநகராட்சி கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுப்பதோடு 24வது வார்டில் இருந்தும் என்னை விடுவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மாநகராட்சி அலுவலரை அவதூறாக பேசியதாக சம்பந்தப்பட்ட அலுவலருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பாமக கவுன்சிலரை கண்டித்து கடலூர் மாநகராட்சியின் துப்புரவு ஆய்வாளர் அப்துல் ஜாபர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், உதவியாளர்கள், துப்புரவு அலுவலர்கள் ஆகியோர் கருப்பு பட்டை அணிந்து திடீரென்று மாநகராட்சி அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆணையாளர் காந்திராஜை சந்தித்து மனு அளித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் சண் முத்துகிருஷ்ணன், பாமக கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் காந்திராஜ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து மனு கொடுத்தனர். அதில், கடலூர் மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் உள்ள பல்வேறு குறைகள் குறித்து மனுவாகவும், மாநகராட்சி கூட்டத்திலும் தெரிவித்து வருகின்றேன்.

மாநகராட்சி வருவாய் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் அதிக அளவில் லஞ்சம் கேட்பது தொடர்பாக பல கூட்டங்களில் பேசி உள்ளேன். சென்ற கூட்டத்தில் கூட தெருவிளக்குகள் மற்றும் குடிநீர் விநியோகம் உள்ள குறைபாடுகள் சுட்டிக் காட்டும் விதமாக ராந்தல் மற்றும் காலி குடத்துடன் வந்து எனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன்.

இந்நிலையில் எனது வார்டில் வரி வசூல் செய்ய வந்த வருவாய் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது. பொதுமக்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை வருவாய் அதிகாரிகள் மற்றும் உதவியாளர் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு பாமக கவுன்சிலர் சரவணன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பாமக கவுன்சிலரை கண்டித்து மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து பாமகவினர் அதிகாரிகள் மீது லஞ்சம் வாங்கி அவதூறு பரப்புவதாக புகார் மனு அளித்த சம்பவம் கடலூர் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பாமக கவுன்சிலர் மீது அலுவலர் புகார் லஞ்சம் கேட்பதாக கவுன்சிலரும் புகார் appeared first on Dinakaran.

Tags : Bamaka ,Cuddalore Corporation ,Cuddalore ,Usha ,Saravanan ,24th Ward Councilor ,Cuddalore City ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!