×

குலசேகரம் அருகே டாரஸ் லாரி மோதி கணவருடன் பைக்கில் வந்த பெண் பலி

* சடலத்துடன் பொதுமக்கள் மறியல்

* அனைத்துக்கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு

குலசேகரம் : குலசேகரம் அருகே டாரஸ் லாரி மோதி கணவருடன் பைக்கில் வந்த பெண் பலியானார். சடலத்துடன் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். குலசேகரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து தினமும் ஏராளமான கனரக லாரிகளில் கேரள உள்ளிட்ட பகுதிகளுக்கு கனிமப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம், வலியாற்றுமுகம், சுருளகோடு, அருமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் 24 மணி நேரமும் டாரஸ் லாரிகள் அதிகம் சென்று வருகின்றன.இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் சாலைகள் விரைந்து சேதமடைகின்றன. மேலும் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாத படி நெருக்கடியும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு புலியிறங்கி பகுதியில் காரில் பள்ளிக்கூடம் சென்ற குழந்தைகளின் கார் மீது டாரஸ் லாரி மோதியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பலமணி நேரம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து காலை, மாலை பள்ளி நேரங்களில் டாரஸ் லாரி செல்ல அப்பகுதியில் தடை விதிக்கப்பட்டது. இருந்தும் மற்ற சாலைகளில் தொடர்ந்து சென்று வருகின்றன. இரவு நேரங்களில் இந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கடும் இரைச்சல் காரணமாக சாலையோர வீடுகளில் வசிப்பவர்கள் தூக்கமின்றி அவதிப்படும் நிலையும் உள்ளது.

இந்நிலையில் நேற்று பகல், திருவட்டார் அடுத்துள்ள சித்திரங்கோடு மேக்கோடு பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ்(45) மனைவி அனிதாவுடன்(40) பைக்கில் வந்தார். அமல்ராஜ் மாவு அரைத்து கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியில் வந்த போது பின்னால் வலியாற்று முகம் பகுதி நோக்கி கனிம பொருட்கள் ஏற்றுவதற்காக வேகமாக வந்த டாரஸ் லாரி அவர்களை முந்திச்செல்ல முயன்றது. அப்போது பக்கவாட்டில் உரசி கீழே தள்ளியது.

இதில் சாலையில் விழுந்த அனிதா மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அமல்ராஜ் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில் காயத்துடன் உயிர் தப்பினார். அப்பகுதியினர் காயமடைந்த அமல்ராஜை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கணவன் கண் முன் மனைவி உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து, கனிம வள லாரிகள் இந்த சாலையில் செல்ல அனுமதிக்க கூடாது என்று கூறி மறியல் செய்தனர்.

பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் சுபாஷ் கென்னடி, எடிசன், எட்வின், திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ், பொன்மனை பேரூர் செயலாளர் சேம் பெனட் சதீஷ், திருவட்டார் கிழக்கு வட்டார காங். தலைவர் ஜெபா, மேற்கு வட்டார பொருளாளர் ஜேம்ஸ் ராஜ், திமுக மாவட்ட பிரதிநிதிகள் பெர்ஜின், பொன்ஜேம்ஸ், நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சீலன், சமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ், பாஜக மாவட்ட செயலாளர் வினோத்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் நிமால், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், நாகர்கோவில் மாநகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ், பா.ஜ. மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது.

போலீசார் மற்றும் அதிகாரிகள் விபத்தில் இறந்த அனிதாவின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் மாலை 4 மணியளவில் சம்பவ இடம் வந்தார். இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு ஏற்படவேண்டும் எனக்கூறி சாலையில் அமர்ந்து மறியலில் கலந்துகொண்டார்.

திருவட்டார் தாசில்தார் சுரேந்திரதாஸ், பத்மநாபபுரம் ஆர்டிஓ(பொ) லொரேட்டா, ஏடிஎஸ்பி மதியழகன், குளச்சல் ஏஎஸ்பி பிரவின் கவுதம், மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனால் குலசேகரம் வலியாற்றுமுகம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர். பலியான அனிதாவுக்கு ஆரோன்(13), ஆப்ரின்(8) என இருமகன்கள் உள்ளனர்.

இன்சூரன்ஸ் கம்பெனி பார்த்துக் கொள்ளும் டிரைவர் அலட்சியம்

இருதினங்களுக்கு முன் குலசேகரம் செருப்பாலூர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய டாரஸ் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் பொதுமக்கள் மெதுவாக செல்லுங்கள் பள்ளி, கல்லூரி குழந்தைகள், பொதுமக்கள் செல்லும் சாலையில் அதிவேகமாக செல்வதால் எவ்வளவு பிரச்னை ஏற்படுகிறது. விபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்ல முடியும் என கோரினர். லாரி ஓட்டி வந்த ஓட்டுநர் அதையெல்லாம் இன்சூரன்ஸ் கம்பெனி பார்த்துக்கொள்ளும் என அலட்சியமாக கூறிவிட்டு சென்றார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தொடர்ச்சியாக 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இழுபறிநிலை நீடித்தது. தொடர்ந்து எஸ்பி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்து நடந்த வலியாற்றுமுகம் குலசேகரம் சாலை வழியாக டாரஸ் லாரிகளை முற்றிலும் தடை செய்வதாகவும், விபத்து ஏற்படுத்திய லாரி உரிமையாளருக்கு சொந்தமான கிரஷரை மூட நடவடிக்கை எடுப்பதாகவும், இறந்து போனவர் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து ஐந்தரை மணிநேரம் நடந்த மறியல் முடிவுக்கு வந்தது. போலீசார் பலியான அனிதா உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post குலசேகரம் அருகே டாரஸ் லாரி மோதி கணவருடன் பைக்கில் வந்த பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Taurus ,Kulasekaram ,Kulasekaram… ,
× RELATED குலசேகரம் அருகே காதல் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை