×

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா இந்தியா, இலங்கையை சேர்ந்த 8 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி : ஆலோசனை கூட்டத்தில் முடிவு

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் இந்தியா, இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பதற்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலெக்டர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வரும் பிப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப். 24ம் தேதி சிறப்பு திருப்பலி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு கச்சத்தீவில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட அரசு செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கலெக்டர் சிவபாலசுந்தரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து தலா 4 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. பக்தர்களுக்காக சுகாதாரம், படகு போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு, குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டது.

பக்தர்களுக்கு தேவையான முதல் நாள் இரவு உணவு, இரண்டாம் நாள் காலை உணவு வழங்கும் பணியை தேவாலய நிர்வாகமும் நெடுந்தீவு பிரதேச செயலகமும் இணைந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மற்ற பணிகள் அனைத்தையும் அந்தந்த துறையின் சார்பில் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.

கூட்டத்தில் நெடுந்தீவு பிரதேச அரசு செயலாளர் சத்யஜோதி, பாதிரியார் வசந்தன் அடிகளார், யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர், இந்திய துணை தூதரக அதிகாரிகள், இலங்கை கடற்படை, ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா இந்தியா, இலங்கையை சேர்ந்த 8 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி : ஆலோசனை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Kachativu Antoniyar Festival ,India ,Sri Lanka ,RAMESWARAM ,JAFFNA ,KACHATIVU ANTHONY FESTIVAL ,St. Anthony's Temple ,Kachativi ,Kachativu Anthony Festival India ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...