×

நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கடைகளின் முன் பகுதிகள் அகற்றம் : ˜ அதிகாரிகளுடன் வாக்குவாதம் ˜ கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு

கூடுவாஞ்சேரி, ஜன.24: நீதிமன்ற உத்தரவின்படி, வல்லாஞ்சேரியில் 22 கடைகளின் முன் பகுதிகளை வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட வல்லாஞ்சேரி மற்றும் கிழக்கு பொத்தேரி பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் இஸ்லாமியர் குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், மேற்படி பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் குடியிருக்கும் சர்வே எண் 214, 223 மற்றும் 110/3ல் நீர்நிலை புறம்போக்கில் தனியார் கல்லூரி நிர்வாகம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாகவும், இதில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி அதிமுகவை சேர்ந்த யுவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி வருகிற 30ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கூடுவாஞ்சேரி உதவி போலீஸ் கமிஷனர் ஜெயராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் வல்லாஞ்சேரி மற்றும் கிழக்கு பொத்தேரியில் நேற்று அதிகாலையில் குவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

இதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் கேது (எ) தென்னவன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையில் மாவட்ட துணை அமைப்பாளர் மணிமாறன் மறைமலைநகர் நகர துணை செயலாளர் அருள் ஆகியோரை கூடுவாஞ்சேரி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் கைது செய்தனர். பின்னர், வல்லாஞ்சேரி மற்றும் கிழக்கு பொத்தேரி பகுதிக்கு சென்று போராட்டம் நடத்த முயன்ற விசிக நகர துணை செயலாளர் தலித்சுதாகர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனையடுத்து, 5க்கும் மேற்பட்ட ராட்சத பொக்லைன் இயந்திரங்களை எடுத்து வந்து செங்கல்பட்டு தாலுகா பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று காலை 7 மணி முதல் சாலை ஓரத்தில் இருந்த 22 கடைகளின் முன் பகுதி இடித்து அகற்றப்பட்டன.

அப்போது, அங்கு திரண்டு வந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரிடம், சர்வே எண் 214 மற்றும் 223ல் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சர்வே எண் 110/3ல் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை வருவாய் துறையினர் இடித்து தள்ளுவது எந்த விதத்தில் நியாயம் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலை மறியலில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்த பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், அப்பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

The post நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கடைகளின் முன் பகுதிகள் அகற்றம் : ˜ அதிகாரிகளுடன் வாக்குவாதம் ˜ கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Vallanchery ,Adhi ,Dravidians ,Vallanjeri ,East Potheri ,Kuramalainagar Municipality ,Chengalpattu District ,Guduvanjeri ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...