×

தையூர் கிராமத்தில் மாநகர பேருந்து பணிமனை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர், ஜன.24: கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் மாநகர பேருந்து பணிமனை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் மாநகர பேருந்துக்கான பணிமனைகள் திருவான்மியூர், தாம்பரம், அடையாறு, மந்தைவெளி உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. தற்போது, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றின் வழியாக மாமல்லபுரம், மானாம்பதி, திருப்போரூர், செங்கல்பட்டு வரை மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால், பேருந்துகளை பராமரிக்க ஏதுவாக ஓஎம்ஆர் சாலையில் கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் மாநகர பேருந்து பணிமனை அமைக்க 11 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பணிமனை அமைவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனால், பேருந்து பழுது, பராமரிப்பு ஆகியவற்றை சென்னை திருவான்மியூர் உள்ளிட்ட பணிமனைகளில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேர விரயம், எரிபொருள் வீணாகுதல், கூடுதல் செலவினம் ஆகியவை ஏற்படுவதாக மாநகரப் பேருந்து ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தையூர் ஓஎம்ஆர் சாலையில் பணிமனை அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு போக்குவரத்து ஊழியர்களும் தங்களின் கூட்டுறவு சங்கம் மூலமாக இந்த நிலத்தை ஒட்டி வீட்டு மனைப்பிரிவு உருவாக்கி அதை பதிவும் செய்து வைத்துள்ளனர். பணிமனை தொடங்கினால் பலரும் இந்த மனைப்பிரிவில் வீடு கட்டி குடியேறுவர். இதனால், இப்பகுதி வளர்ச்சி அடைவதோடு அதைச்சுற்றியுள்ள பகுதிகளும் வளர்ச்சி பெறும். சிறு தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள் உருவாவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஓஎம்ஆர் சாலையிலேயே திருப்போரூரில் மட்டும்தான் சுமார் 40 பேருந்துகளை நிறுத்தக்கூடிய அளவிற்கு பெரிய பேருந்து நிலையம் உள்ளது.

மாமல்லபுரம், திருப்போரூர் பகுதிக்கு இரவு ஷிப்டில் பணிபுரிவோர் சென்னைக்கு சென்று பேருந்துகளை பணிமனையில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தையூர் பகுதியில் பணிமனை அமைக்கப்பட்டால், இந்த தடத்தில் பணியாற்றுவோர் விரைவில் வீடு திரும்பவும், மீண்டும் பணிக்கு வரவும் எளிதாகும் என்றும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே, தையூர் ஓஎம்ஆர் சாலையில் அரசு கையகப்படுத்தி உள்ள 11 ஏக்கர் நிலத்தில் விரைவில் மாநகர பேருந்து பணிமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post தையூர் கிராமத்தில் மாநகர பேருந்து பணிமனை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Municipal Bus Workshop ,Taiyur village ,Tirupporur ,Kelambakkam ,Chennai ,Thiruvanmiyur ,Tambaram ,Adyar ,Mantaiveli ,Taiyur ,
× RELATED திருப்போரூர் – மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை