×

சாலை விபத்தில் மணமகளின் தந்தை பலி ஆரணி அருகே சோகம் சீதனமாக வழங்கவிருந்த மொபட் விபத்தில் சிக்கியது

ஆரணி, ஜன.24: ஆரணி அருகே மகளுக்கு சீதனமாக வழங்கவிருந்த மொபட் விபத்தில் சிக்கி தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த குப்பம் கிராமம் பாறை கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(58), விவசாயி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் சங்கீதாவுக்கு நேற்று முன்தினம் ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. அதற்கு முந்தைய நாள் (21ம் தேதி) இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு செல்வம் தனது வீட்டில் உள்ள ஆடு, மாடுகளுக்கு வைக்கோல், தீனி போடுவதற்காக சென்றார். அப்போது, மகளுக்கு சீதனமாக வழங்க புதிதாக வாங்கிய மொபட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். தொடர்ந்து, ஆரணி அடுத்த சேவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றபோது, வேலூர்- ஆரணி சாலையில் உள்ள வேகத்தடை மீது மொபட் ஏறி இறங்கியது.

அப்போது, நிலை தடுமாறிய செல்வம் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், ஏற்கனவே ஏற்பாடு செய்தபடி அவரது மகள் சங்கீதா திருமணம் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் செல்வம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செல்வத்தின் மகள் சிவசங்கரி(19) ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளுக்கு சீதனமாக வழங்க ஆசையாக வாங்கியிருந்த மொபட்டானது விபத்தில் சிக்கியதும், மகளின் திருமணத்தை பார்க்க முடியாமல் மருத்துவமனையில் தந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சாலை விபத்தில் மணமகளின் தந்தை பலி ஆரணி அருகே சோகம் சீதனமாக வழங்கவிருந்த மொபட் விபத்தில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Arani ,Selvam ,Kuppam village ,Kannamangalam, Thiruvannamalai district ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு