×

இளைஞர் அணி மாநாட்டின் வெற்றி மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கட்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சென்னை: சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டின் வெற்றி, மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய ஒன்றியத்தில் இப்படி ஒரு மாநாடு நடந்திடவேயில்லை என்கிற வகையில், திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தி முடித்துள்ளோம். பொதுவாகவே, அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால் சிலர் திட்டமிட்டு மக்கள் மத்தியில் ஒரு விதமான எதிர்மறை எண்ணத்தை கிளப்பி விடுவார்கள். ஆனால், இந்த மாநாடு அந்த எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றி இருக்கிறது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களையும், மாநிலம் முழுக்க பொதுக்கூட்டங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளோம்.

நேற்று வரை நமது மாநாடு தான் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் மாநாடு பெற்ற பிரமாண்ட வெற்றியின் விளைவு, நாடாளுமன்ற தேர்தலில் நமது கழகம் பெறப்போகிற மாபெரும் வெற்றி எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. எனவே, மாநாடு முடிந்து விட்டது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று இளைஞர் அணி தோழர்கள் எண்ணிவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் மிக அருகில் வந்துவிட்டது இதுவரை உழைத்துவிட்டு இனி ஓய்வெடுத்தால் அது முயல்-ஆமை கதையாய் முடிந்து விடும். உங்களின் சுறுசுறுப்பை நீங்கள் மேலும் கூட்ட வேண்டும். நமது மாநாட்டின் நோக்கம் “மாநில உரிமை மீட்பு”. அந்த நோக்கத்தை நாம் வென்றாக வேண்டுமென்றும். இன்னார்க்கு இன்னது என்று சொல்லும் பாசிஸ்ட்டுகளையும் அவர்களுக்கு ஆமாம் சாமி போடும் அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்திடுவோம். எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் தத்துவம் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவுகின்ற வகையில் அயராது உழைக்க இளைஞரணி மாநாடு எல்லோருக்கும் உத்வேகம் தந்திருக்கிறது. மத அரசியலா-மனித அரசியலா? மனு நீதியா-சமூக நீதியா? மாநில உரிமையா ? பாசிச அடக்குமுறையா? என ஒரு கைபார்த்துவிடுவோம். வெல்லப்போவது சமூக நீதியும் சமத்துவமுமே என்பதை இளைஞர் அணி மாநில மாநாடு நமக்கு கோடிட்டு காட்டியிருக்கிறது.

இந்த நேரத்தில் மாநாட்டில், தலைவரின் கருத்தைநினைவுபடுத்த விரும்புகிறேன். “இந்த மாநாட்டில் கூடியிருக்கும் உங்களையெல்லாம் பார்க்கும் போது நான் லட்சம் இளைஞர்களின் சக்தியை பெறுகிறேன். உதயநிதி மட்டுமல்ல, ஒவ்வொருவரும் என்னுடைய மகன் தான். திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசு தான்” என்று சொன்னாரே அதுதான் நமது மாநாட்டு வெற்றியின் அளவீடு. மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்டுகளுக்கு முடிவுகட்டி அடிமைகளை புறந்தள்ளி இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவரின் கரங்களில் சேர்ப்போம்.

The post இளைஞர் அணி மாநாட்டின் வெற்றி மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கட்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : team ,Lok Sabha elections ,Udayanidhi Stalin ,Chennai ,Minister ,Salem ,DMK Youth Team ,Youth Welfare and Sports Development ,Udhayanidhi Stalin ,Youth Team Conference ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...