×

மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் கோயில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிராக முடிவு எடுக்க கூடாது: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி கோயிலில் வாழ்நாள் அறங்காவலராக பணியாற்றிய கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோயிலை நிறுவிய பரம்பரை அறங்காவலரான மறைந்த மந்தன நரசிம்ம ராஜு, 1985ல் என்னுடன் சேர்த்து ஐந்து வாழ்நாள் அறங்காவலர்களை நியமித்தார். மற்ற நான்கு அறங்காவலர்கள் மரணமடைந்து விட்டதால் 4 பேரை அறங்காவலர்களாக நியமிக்கும்படி, கோவை இணை ஆணையருக்கு கடிதம் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோயிலுக்கு மண்டபம் கட்டிக்கொடுத்தது போன்ற காரியங்களைச் செய்த கண்ணன் என்பவர் தற்காலிக அறங்காவலராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சித்ரா பவுர்ணமி விழா தொடர்பான கூட்டத்தில் பிரச்னை காரணமாக கண்ணன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் எங்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோயில் கணக்கு வழக்குகளை முறையாக கையாளவில்லை என்றும் கண்ணனுக்கு எதிராக நாங்கள் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில், அறநிலைய துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தபோது உரிய விளக்கமளித்த போதும் என்னை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல்சலீம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு உரிய விளக்கத்தை அறநிலையத்துறை தெரிவிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவில்லாமல் மனுதாரருக்கு எதிரான நடவடிக்கையை அறநிலையத்துறை எடுக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

The post மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் கோயில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிராக முடிவு எடுக்க கூடாது: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madhukarai Dharma Lingeswarar Temple ,Court Orders Endowment Department ,Chennai ,Krishnasamy ,Madhukarai Dharma Lingeswarar Swami Temple ,Coimbatore ,Madras High Court ,Mandana Narasimha Raju ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...