×

திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை கதாநாயகியாகக்கூட இருக்கலாம்: கனிமொழி எம்.பி. பேட்டி

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை கதாநாயகியாகக்கூட இருக்கலாம் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டத்திற்கு பிறகு கனிமொழி எம்.பி. பேட்டி அளித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தலையொட்டி, கட்சிகள் சார்பில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள், பிரச்சார ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், திமுக சார்பிலும் அண்மையில் தேர்தல் குழுக்கள் அமைக்கப்பட்டன.

தேர்தல் அறிக்கை குழு: அதன்படி, நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை தயாரிப்பு’ குழு, கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்), ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்), டி.ஆர்.பி.இராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்), கோவி.செழியன் (கழக வர்த்தகர் அணி துணைத் தலைவர்), கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., (கழக மாணவரணிச் செயலாளர்), எம்.எம்.அப்துல்லா எம்.பி., (கழக அயலக அணிச் செயலாளர்), மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., (கழக மருத்துவ அணிச் செயலாளர்), மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர், கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மேயர் பிரியா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கனிமொழி பேட்டி: இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கனிமொழி எம்.பி. அப்போது பேசிய அவர், “வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நடைபெற்றது. தேர்தல் குழு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மக்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டறிய உள்ளோம்.

அதன்பிறகு சென்னைக்கு வந்து தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபடுவோம். முதற்கட்டமாக எந்தெந்த இடங்களுக்கு செல்கிறோம் என்பது தொடர்பான பட்டியலை இன்று தயாரித்துள்ளோம். இந்த பட்டியலை முதல்வர் ஸ்டாலினிடம் காட்டி ஒப்புதல் பெற்று அதன் பிறகு, அந்த ஊர்களுக்குச் சென்று மக்களின் கருத்துகளைக் கேட்க உள்ளோம். கதாநாயகியாகவும் இருக்கலாம்: அவற்றை கருத்தில் எடுத்துக்கொண்டு, தேர்தல் அறிக்கையை தயார் செய்ய உள்ளோம். பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களை பெறும் வகையில் இம்முறையும் ஆலோசனை வழங்க மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் இரண்டொரு நாட்களில் வெளியிடப்படும். எப்போதும் போல இம்முறையும் திமுக தேர்தல் அறிக்கை முக்கிய பங்கு வகிக்கும்” எனத் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், திமுகவின் தேர்தல் அறிக்கை இந்த தேர்தலின் கதாநாயகனாக இருக்குமா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி “அது கதாநாயகியாகவும் இருக்கலாம்” என சிரித்தவாறு பதிலளித்துவிட்டுச் சென்றார். பெண்களுக்கான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அதிகம் இடம்பெறும் என்பதைத்தான் அவர் சூசகமாகச் சொல்கிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன

The post திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை கதாநாயகியாகக்கூட இருக்கலாம்: கனிமொழி எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dimukha ,Kanylanghi M. B. ,Chennai ,Dimuka ,Election Report Preparation Committee ,Anna Entwalaya ,Kanimozhi M. B. ,2024 parliamentary elections ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...