×

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது..உடனடியாக மீட்க நடவடிக்கை தேவை : மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். உடனடியாக அவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 3 நிகழ்வுகளில் 40 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசின் வலியுறுத்தலை ஏற்று அவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கான ஆணை கூட இன்னும் பிறப்பிக்கப்படாத நிலையில் அடுத்தக்கட்டமாக மேலும் 6 மீனவர்களை இலங்கைப் படைகள் கைது செய்துள்ளன.

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் நிகழ்வாகி விட்டன. இலங்கைப் படையினரின் தொடர் அத்துமீறல்கள் காரணமாக தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது..உடனடியாக மீட்க நடவடிக்கை தேவை : மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Anbumani ,Chennai ,Sri Lankan Navy ,Bay of Bengal ,Sinhalese ,BAMA ,Anbumani Ramadoss ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...