×

நாட்டிலேயே முதல்முறை… மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது தமிழக அமைச்சரவை

சென்னை: மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது… கடந்த 2021 டிசம்பரில் மாநில மகளிர் வரைவு கொள்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டு கருத்து கேட்கப்பட்ட நிலையில், இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம், கவர்னர் உரையுடன் தொடங்கும். ஆனால் இந்தாண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிரதமர் மோடி தமிழகம் வருகை மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் செல்ல உள்ளதால் சட்டப்பேரவை கூடுவது தாமதமாகி வந்தது.இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் கவர்னர் உரை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க வருகிற 28ம் தேதி ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கிறார். அவர் பிப்ரவரி முதல்வாரம்தான் சென்னை திரும்புகிறார். இதனால் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 2வது வாரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரிலேயே, தமிழக அரசின் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.அதன்படி, ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். கவர்னர் உரையில், இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மாநில மகளிர் கொள்கைக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையிலான குழு இந்த கொள்கையை வடிவமைத்துள்ளது.

இந்த மாநில மகளிர் கொள்கையில், இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்கள்:

* 33 சதவீத இடஒதுக்கீடு அரசு, தனியார் என அனைத்து இடங்களிலும் அமல்படுத்தப்படும்.

* கிராமப்புறங்களில் வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தை கூடுதலாக 50 நாட்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பள்ளி, கல்லூரி பெண்களுக்கு தற்காப்புக் கலைகள் பயிற்சி அளிக்கப்படும் என புதிய கொள்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

* 19 வயது வரையிலான இளம் பெண்களுக்கு கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலா திட்டம் விரிவுபடுத்தப்படும்.

* அரசு தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும்.

இதனிடையே நாட்டிலேயே, மாநில அளவில் மகளிர் கொள்கை வகுத்த ஒரே மாநிலம் தமிழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நாட்டிலேயே முதல்முறை… மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது தமிழக அமைச்சரவை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Cabinet ,Chennai ,Tamil Nadu Government ,Tamil Nadu Legislature ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...