×

தைப்பூச திருவிழாவுக்காக பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் படையெடுப்பு

உடுமலை : அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் ஆண்டுதோறும் தைமாத பெளர்ணமி தினத்தில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தைப்பூச தேர்த்திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். ஆங்கில புத்தாண்டு முதல் ஜனவரி மாதம் இறுதி வரை பக்தர்கள் கூட்டம் பழனிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வருகின்றனர். 25ம் தேதி தைப்பூசம் என்பதால் நாளுக்கு நாள் பாதயாத்திரையாக உடுமலையை கடந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பகலில் வெயில் அதிகரிக்கும் வேளைகளில் மர நிழலிலும், சாலையோர கடைகளிலும் அமர்ந்து ஓய்வெடுக்கும் பக்தர்கள், மாலை மற்றும் இரவு, அதிகாலை வேளைகளில் மீண்டும் பயணத்தை தொடர்கின்றனர்.

மேலும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் உடுமலை, மடத்துக்குளம் வழியே பயணிக்கின்ற பக்தர்களுக்கு வழிநெடுகிலும் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், சர்பத்,குளிர்பானங்களும், தண்ணீரும், சில இடங்களில் சிற்றுண்டி,மதிய உணவும் வழங்கப்படுகிறது. சமூக நல அமைப்பினர் பலர் இரவினில் ஒளிரும் வகையில் ரிப்ளக்டர் ஸ்டிக்கர்களை பக்தர்களின் ஆடைகளிலும், உடமைகளிலும் ஒட்டி அனுப்பி வருகின்றனர். இரவில் வாகனங்கள் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களை கண்டு ஒதுங்கி செல்வதற்காக மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து போலீசார், முருக பக்தர்களை பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும்படி அறிவுறுத்துவதோடு, கூட்டமாக சாலைகளை மறித்தபடி செல்லாமல், ஒருவர் பின் ஒருவராக வரிசையாக சாலையின் இடதுபக்கமாக பயணிக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இதே போல வாகன ஓட்டிகளுக்கும் போட்டி போட்டு அதிவேகத்தில் செல்லக் கூடாது எனவும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்கள் பயண களைப்பை போக்கும் பொருட்டு ஆங்காங்கே மரநிழலில் பக்தி பாடல்களை பாடுவதோடு, மேள,தாளங்கள் முழங்க காவடி ஆட்டம் ஆடியபடி செல்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலை முதல் நள்ளிரவு வரை உடுமலை வழியாக பயணிப்பதால் சாலையோரம் முழுவதும் பச்சை நிற ஆடைகளாக காட்சி அளிக்கின்றது.

உடுமலையை ஒட்டி ஓடுகின்ற பிரதான வாய்க்கால் மற்றும் விளைநிலங்களில் உள்ள கிணறுகள், பம்புசெட்டுகள் போன்றவற்றிலும் அதிகாலை நேரங்களில் முருக பக்தர்கள் குளித்து மகிழ்கின்றனர். சாலையோர விவசாயிகள் தங்களது பம்பு செட்டுக்களை இலவசமாக இயக்கி பக்தர்கள் குளிக்க உதவி புரிகின்றனர். பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், போக்குவரத்து போலீசாரை கூடுதலாக நியமித்து முருக பக்தர்கள் நெரிசலின்றி பழனியை சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தைப்பூச திருவிழாவுக்காக பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் படையெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Palani Murugan temple ,Thaipusa festival ,Udumalai ,Palani ,Taimata Pelarnami ,Tamil Nadu ,New Year ,
× RELATED ஒப்பந்த கூலி வழங்க வலியுறுத்தல்...