×

திருப்பதி மாவட்டத்தில் போலீசார் அதிரடி செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் 20 பேர் கைது

*திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்

திருமலை : திருப்பதி மாவட்டத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் டிஎஸ்பி செஞ்சுபாபு தலைமையில் அன்னமையா மாவட்டம் ராஜாம்பேட்டை ஆர்.ஐ. சிரஞ்சீவி, ஆர்எஸ்ஐ முரளிதர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை சுண்டுப்பள்ளி மண்டலம், சனிபய சரகத்தில், குடுமண்டலப்பள்ளி சாலையோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த காரை சுற்றி வளைத்து சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது போலீசாரை கண்டதும் காரில் இருந்து சிலர் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை மடக்கிபிடித்ததில் ஒருவர் சிக்கினார். இதையடுத்து காரில் சோதனை செய்தபோது, 5 செம்மரக் கட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பிடிபட்ட பெங்களூருவை சேர்ந்த சையது நௌஷாத்(28) என்பவரை கைது செய்தனர். மேலும் காருடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், ஆர்ஐ சுரேஷ்குமார், விஷ்ணுவர்தன் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பதி காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ரோல்லமடுகு, ஏகாசு குப்பம் நோக்கி ரோந்து சென்றனர். அப்போது அன்னமையா மாவட்டம் ராஜாம்பேட்டை சரகத்தில் எஸ்.ஆர் பாலம் புட்டாங்கி குளத்தில் சிலர் செம்மரக் கட்டைகளை எடுத்துச் சென்றதைக் பார்த்தனர். அதிரடிப்படையினர் அவர்களை சுற்றி வளைக்க முயன்றபோது, ​​செம்மரக்கட்டைகளை கீழே வீசி விட்டு தப்பி ஓட முயன்றனர்.

இதில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை குப்புசாமி(28) என்பவரை பிடித்து அந்த பகுதியில் இருந்து 5 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ரயில்வே கோடூர் அதிரடிப்படையின் துணைக் கட்டுப்பாட்டு அலுவலகத்தைச் சேர்ந்த ஆர்.ஐ. கிருபானந்தா, ஆர்.எஸ்.ஐக்கள் ராகவேந்திரா மற்றும் விஸ்வநாத் ஆகியோர் நெல்லூர் மாவட்டம் கலுவாய், ரபோலு பாவியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெங்கடராமராஜுபேட்டையில் இருந்து ராஜுபாலம்பிடி கீழ் மேற்கு பக்கம் வனப்பகுதி நோக்கி சென்ற ​வேனில் இருந்து சிலர் சந்தேகப்படும்படியாக இறங்கி வனப்பகுதியில் செல்ல முயன்றபோது அவர்களை சுற்றி வளைத்து அவர்களிடமிருந்து 7 இரும்பு கோடாரிகள் மற்றும் ரம்பங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்ட செல்வது தெரியவந்தது.

வேன் பறிமுதல் செய்யப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சேகர் வெலகாசி(41), தச்சனா வெலகாசி(33), பிரகாஷ் சின்னபையன்(43), அசோக்(33), பொன்னுசாமி சின்னபையன்(43), சம்பத் தச்சிணாமூர்த்தி(19), சுந்தரேசன் சூர்யன்(24), ராஜவேல் சூர்யன்(29), ராஜேந்திரன் சின்னசாமி(39), சின்னசாமிராஜி(64), சந்திரன் சடையன்(49), விஜய் குமார்(43), முருகன் பொன்னுசாமி(44), விஜயகுமார் முத்து(33), ராமர் சின்னப்பையன்(39), சௌந்தர் மணி(21), குப்புசாமி அப்பாசாமி(39), நெல்லூர் நகரைச் சேர்ந்த நக்கனா மகேஷ் ரெட்டி ஆகிய 18 பேரை கைது செய்தனர்.
மொத்தம் மூன்று வெவ்வேறு வழக்குகளில் 10 செம்மரக்கட்டைகள், 1 கார், 1 வேன் மற்றும் 20 பேரை கைது செய்தனர். தப்பி ஓடியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு தனிப்படை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ சி.எச்.ரபி விசாரணை நடத்தி வருகிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post திருப்பதி மாவட்டத்தில் போலீசார் அதிரடி செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் 20 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupati district police ,Tirumala ,Tiruvannamalai ,Tirupati district ,Andhra Pradesh Tirupati Anti Sheep Smuggling Task Force ,DSP ,Senjubabu ,Annamaiya District Rajampet ,Tirupati District Police Action Against Sheep ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ