×

பம்மல், அண்ணா நகர் பகுதியில் சேறும், சகதியுமாக மாறிய சாலை: சீரமைக்க கோரிக்கை


தாம்பரம்: பம்மல், அண்ணா நகர் பகுதியில் சேறும், சகதியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலம் பம்மல், அண்ணா நகர், இந்திரா காந்தி சாலையில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பள்ளி, கோயில்கள், நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். மேலும், இந்திரா காந்தி சாலை தான் அப்பகுதியில் உள்ள மற்ற சாலைகளுக்கு முதன்மை சாலையாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை சிதிலமடைந்து சேறும், சகதியுமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சகதி சாலையில், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர்.

அதேபோல, மழைக்காலங்களில் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு, மழைநீர் தேங்கி நிற்பதுடன் கழிவு நீரும் குடியிருப்பு வீடுகளில் புகுந்துவிடும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அனைத்து குடியிருப்பு வாசிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். சாலை அமைத்து தர வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சாலை வசதி இல்லாததால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்று வருபவர்கள் அத்தியாவசிய தேவைக்கு செல்பவர்கள் என அனைவருக்கும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சாலை முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் சாலையில் நடந்து செல்லும்போது கூட கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. தினமும் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது யாராவது ஒருவர் கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே, இதுபோன்ற விபத்துக்களை தடுக்கவும் பொதுமக்கள் இடையூறு இன்றி சென்று வரவும் சம்பந்தப்பட்ட பகுதியில், சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post பம்மல், அண்ணா நகர் பகுதியில் சேறும், சகதியுமாக மாறிய சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anna Nagar ,Pammel ,Tambaram ,Indira Gandhi Road ,Pummel ,1st Zone ,Tambaram Corporation.… ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை