×

நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனுக்கு தபால்தலை வெளியிட உத்தரவிட முடியாது: அரசை அணுகுமாறு மனுதாரருக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: மதுரையை சேர்ந்த நேதாஜி இளைஞர் சங்கத்தின் தலைவர் முத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முதல் சுதந்திர போராட்ட வீரர் நெல்லை மாவட்டம் நெல்கட்டும் செவலை சேர்ந்த பூலித்தேவன். கடந்த 1750 முதல் 1766வரை ஆங்கிலேயர்கள் மற்றும் நவாப் கூட்டணி படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து ஆங்கிலேய படைகளை தோற்கடித்தவர். அந்த நேரத்தில் அவரை தோற்கடிக்க முடியாத நவாப்-ஆங்கிலேய படைகள் மருதநாயகம் என்ற யூசுப்கான் என்பவரின் படையை தங்களுடன் சேர்த்து பூலித்தேவன் மீது போர் தொடுத்தனர். அவர்களின் படை வலிமையால் பூலித்தேவனுக்கு பின்னடைவு ஏற்பட்டதையடுத்து ஆங்கிலேயரிடம் சரணடையாமல் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரலிங்க சாமி கோயிலுக்குள் சென்று பூலித்தேவன் மறைந்தார்.

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரரான பூலித்தேவனுக்கு தபால்தலை வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஒன்றிய அரசுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பூலித்தேவனுக்கு தபால்தலை வௌியிடுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது அரசின் செயல்பாடுக்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. உரிய அதிகாரிகளை மனுதாரர் அணுகலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

The post நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனுக்கு தபால்தலை வெளியிட உத்தரவிட முடியாது: அரசை அணுகுமாறு மனுதாரருக்கு ஐகோர்ட் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Bhulythevan ,Chennai ,Madurai ,Netaji Youth Association ,Muthu ,Madras High Court ,Pulithevan ,Nelkattum Sewal ,Nellai district ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை