×

17 தொழில் நிறுவனங்களுக்கு மானியமாக ரூ.9.25 கோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 17 தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகையாக ரூ.9.25 கோடிக்கான காசோலைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணைகளையும், ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 17 தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகையாக ரூ.9.25 கோடிக்கான காசோலைகளை வழங்கினார்.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ், 2 ஏக்கர் நிலத்தில் குறைந்தபட்சம் 3 உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும் என்றும், இதற்கென உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்கள் அமைக்க தகுதியான திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு (அதிகபட்சமாக ரூ.2.50 கோடி) வரை மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கிடவும் ஆணையிட்டுள்ளது. இதன் காரணமாக, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களை அமைப்பதற்கு ஜவுளித் தொழில்முனைவோர் அதிக அளவில் ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர்.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் திட்டத்தின் கீழ், திருவள்ளூர்-திருப்பதி மினி டெக்ஸ்டைல் பார்க், தர்மபுரி-பாரத் மினிடெக்ஸ்டைல் பார்க், கரூர்-விஎம்டி மினிடெக்ஸ்டைல் பார்க், திருப்பூர்-கார்த்திகேயா வீவிங் பார்க், கரூர்- ஸ்ரீ பிரனவ் மினிடெக்ஸ்டைல் பார்க், கரூர்-நாச்சி மினிடெக்ஸ்டைல் பார்க் ஆகிய 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு, திட்ட செயலாக்கத்திற்கான மொத்த மானியத் தொகை ரூ.13.75 கோடி, முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒப்பளிப்பு செய்து அதற்கான திட்ட ஒப்புதல் அரசாணைகளை தமிழ்நாடு முதல்வர் மினி டெக்ஸ்டைல் பார்க் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இதன்மூலம், சிறு மற்றும் நடுத்தர-ஜவுளி தொழில் முனைவோர்கள் பயன்பெறுவதோடு சுமார் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒரு பூங்காவில் ஆண்டுக்கு 24 லட்சம் மீட்டர் உற்பத்தி வீதம் 6 பூங்காக்களில் 144 லட்சம் மீட்டர் அளவிற்கு துணி வகைகள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான முதலீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 17 ஜவுளி நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகை ரூ.9.25 கோடி வழங்கிடும் வகையில், தமிழ்நாடு முதல்வர் நேற்று 5 நிறுவனங்களுக்கு மானியத் தொகை ரூ.5.33 கோடிக்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணிநூல் துறை ஆணையர் வள்ளலார், கைத்தறி துறை ஆணையர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post 17 தொழில் நிறுவனங்களுக்கு மானியமாக ரூ.9.25 கோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,M. K. Stalin ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...